

மும்பை: ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷால் படேல் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேவேளையில் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.
ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷால் படேல் அணிக்கு திரும்பியுள்ளனர்.
அதேவேளையில் ஆசிய கோப்பையின் போது காயம் அடைந்த ஆல்ரவுண்டரான ரவீந்திரஜடேஜா சேர்க்கப்படவில்லை. மாற்று வீரர்களாக முகமது ஷமி, தீபக் ஷாகர், ஸ்ரேயஸ் ஐயர், ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளனர். டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளன.
ஆஸ்திரேலிய அணி 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறுகிறது. இந்த இரு தொடர்களிலும் முகமது ஷமி, தீபக் ஷாகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர்.அஸ்வின், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷால் படேல், அர்ஷ்தீப் சிங்.