Published : 12 Sep 2022 06:56 AM
Last Updated : 12 Sep 2022 06:56 AM

சென்னையில் இன்று முதல் சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ்: முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பு

ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கி அமிர்தராஜ்.படம்: கே.வி. ஸ்ரீநிவாசன்.

சென்னை: முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று முதல் நடைபெறவுள்ளது.

1997-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சென்னையில் ஆண்கள் பங்கேற்கும் ஏடிபி டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த போட்டி 2018-ம் ஆண்டு மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்கான முயற்சியை அகில இந்திய டென்னிஸ் சம்மேளனமும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் எடுத்து வந்தது.

இந்நிலையில் டபிள்யூடிஏ மகளிர் டென்னிஸ் போட்டியை சென்னையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆதரவுடன் இந்தப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் இன்று (செப்டம்பர் 12) முதல் 18-ம்தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டியை நடத்துவதற்கான நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கித் தந்துள்ளார்.

முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒற்றையர் பிரிவில் 22பேர் நேரடியாகவும், 4 பேர் வைல்டு கார்டு நுழைவு மூலமாகவும், 6 பேர்தகுதிச் சுற்று மூலமாகவும் பங்கேற்கவுள்ளனர்.

போட்டியில் முன்னணி வீராங்கனைகள் அலிசன் ரிஸ்கி அம்ரித்ராஜ் (அமெரிக்கா), வர்வரா கிராசெவா (ரஷ்யா), மக்தா லினட் (போலந்து), ரெபேக்கா பீட்டர்சன் (ஸ்வீடன்), தத்ஜனா மரியா (ஜெர்மனி), கியிங் வாங் (சீனா), சிலோயிபாக்கெட் (பிரான்ஸ்), ரெபேக்கா மரினோ(கனடா), மோயுகா உச்சுய்மா (ஜப்பான்), ஒக்சானா செலக்மெட்டேவா (ரஷ்யா), அன்னா பிளிங்கோவா (ரஷ்யா), அனஸ்டாசியா கசனோவா (ரஷ்யா), லிண்டா புருவிர்டோவா (செக்.குடியரசு), கடர்சைனா கவா (போலந்து), யானினா விக்மேயர் (பெல்ஜியம்), விக்டோரியா ஜிமென்ஸ் (அன்டோரா), ஏரியன் ஹர்டோனா (நெதர்லாந்து), ஜோயன் ஜுகெர்(ஸ்விட்சர்லாந்து), கேட்டி ஸ்வான் (பிரிட்டன்), கரோல் ஜாவோ (கனடா),டெஸ்பினா பபாமிகாயில் (கிரீஸ்), யூஜின் பவுச்சார்ட் (கனடா), அங்கிதா ரெய்னா (இந்தியா), கர்மன் கவுர் தண்டி(இந்தியா) ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

போட்டியின் முதல் நிலை வீராங்கனையாக அலிசன் ரிஸ்கி அமிர்தராஜும், 2-ம் நிலை வீராங்கனையாக வர்வராகிராசெவாவும், 3-ம் நிலை வீராங்கனையாக மக்தா லினட்டும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x