

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இலங்கை. அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் சூழலில் இந்த வெற்றி கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையின் ஃபைனலில் விளையாடின. இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேறின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பாகிஸ்தான். ஆனால் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. கேப்டன் பாபர் அசாம், 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த ஃபாக்கர் ஜாமான் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பிரோமத் மதுசூதன்.
தொடர்ந்து வந்த இஃப்திகர் உடன் 71 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த கூட்டணியை மதுசூதன் மீண்டும் தகர்த்தார். பின்னர் நவாஸ், ரிஸ்வான், ஆசிஃப் அலி, ஷா, ஷதாப் கான், நதீம் ஷா, ராஃப் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது பாகிஸ்தான். அதன் பலனாக 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.
முன்னதாக, இலங்கை அணி பேட் செய்த போது 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அந்த அணி 62 ரன்களை எடுத்திருந்தது. அதன் பிறகு பனுகா ராஜபக்சே மற்றும் ஹசராங்கா ஆகியோர் இணைந்து 58 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் கடைசி 31 பந்துகளில் 54 ரன்களை குவித்தது ராஜபக்சே மற்றும் கருணரத்னே இணை. ராஜபக்சே, 45 பந்துகளில் 71 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் அற்புதமாக பந்து வீசி இருந்தனர். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.