Last Updated : 11 Sep, 2022 07:53 AM

 

Published : 11 Sep 2022 07:53 AM
Last Updated : 11 Sep 2022 07:53 AM

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் - இந்திய வீராங்கனைகள் தகுதி சுற்றில் ஏமாற்றம்

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் தோல்வியடைந்தனர்.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 32 வீராங்கனைகளில் 26 பேர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். இதில் 4 வைல்டு கார்டும் அடங்கும். மீதமுள்ள 6 வீராங்கனைகள் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தகுதி சுற்று நேற்று தொடங்கியது. இதன் ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் 3-ம் நிலை வீராங்கனையான ருதுஜா போஸ்லே, சீன தைபேவின் லியாங்குடன் மோதினார். இதில் ருதுஜா போஸ்லே 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான ரியா பாட்டியா 4-6, 0-6 என்ற செட் கணக்கில் லிதுவேனியாவின் ஜஸ்டினா மிகுல்ஸ்கைட்டிடமும், சவுஜன்யா பவிஷெட்டி 4-6, 0-6 என்ற நேர் செட்டில் ஜப்பானின் கியோகா ஒகாமுராவிடமும் வீழ்ந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த சாய் ஷமர்தி 1-6, 0-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நாவோ ஹிபினோவிடமும் லட்சுமி பிரபா அருண்குமார் 4-6, 1-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று முதல் நிலை வீராங்கனையான ஜப்பானின் யூகி நைட்டோவிடமும் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

தகுதி சுற்று தரவரிசையில் 3-வது இடம் பிடித்திருந்த இஸ்ரேலின் லினா குளுஷ்கோ 4-6,6-1, 7-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் மரியா டிமோஃபீவாவை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெற்றது. 2-வது நாளான இன்றும் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x