அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ், காஸ்பர் ரூட் பலப்பரீட்சை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ், காஸ்பர் ரூட் பலப்பரீட்சை
Updated on
1 min read

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் அரை இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 22-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்த்து விளையாடினார். 4 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19 வயதான கார்லோஸ் அல்கராஸ் 6-7 (6-8), 6-3, 6-1, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் ரபேல் நடாலுக்கு பிறகு இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கார்லோஸ் அல்கராஸ். கடந்த 2005-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதி சுற்றில் ரபேல் நடால் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி சுற்றில் கார்லோஸ் அல்கராஸ், 5-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொள்கிறார். காஸ்பர் ரூட் அரை இறுதி சுற்றில் 27-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவை 7-6 (7-5), 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

இந்திய நேரப்படி திங்கள் கிழமை அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் அல்கராஸ் – காஸ்பர் ரூட் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இறுதிப் போட்டியில் பட்டம் வெல்பவர்கள் சாம்பியன் கோப்பையுடன் உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் கைப்பற்றுவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in