

மும்பை: ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையில் இருந்து தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
உலக கிரிக்கெட் அரங்கில் முன்னணி அணியாக வலம் வரும் இந்திய அணி 6 அணிகள் விளையாடிய ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது விமர்சன கணைகளை திருப்பியுள்ளது.
பிசிசிஐயின் முன்னாள் தேர்வாளர் சபா கரீம் இந்திய அணியின் தோல்வி தொடர்பாக பேசுகையில், "இது டிராவிட்டிற்கு நெருக்கடியான நேரம். இந்தியாவின் பயிற்சியாளராக தனது ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது என்பதை டிராவிட் அறிந்து வைத்துள்ளார். உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரும் நடக்கவிருக்கிறது. இந்த இரண்டு பெரிய ஐசிசி நிகழ்வுகள், இந்த இரண்டு சாம்பியன்ஷிப்களையும் இந்தியா வெல்ல முடிந்தால், ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு வழங்கிய பயிற்சிகளால் திருப்தி கொள்வார்.
டிராவிட் விவேகமானவராகவும் புத்திசாலியாகவும் உள்ளார் என்பதை நிரூபிக்கவும், தனது பயிற்சி வாழ்க்கையின் பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யவும் இருக்கும் ஒரே வழி, ஐசிசி கோப்பைகளை வெல்வதுடன், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெறும் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும். இந்த நாடுகளில் டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லத் தொடங்கும் போதே ராகுல் டிராவிட், இந்திய அணியின் செயல்பாடுகளால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.