

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் 32 பேரில், 6 இடங்களுக்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்பட உள்ளது.
இந்த தகுதி சுற்று ஆட்டம் இன்று (10-ம் தேதி) தொடங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 24 வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்தியாவில் இருந்து சாய் ஷமர்தி, லட்சுமி பிரபா அருண் குமார், சவுஜன்யா பவிஷெட்டி, ரியா பாட்டியா, ருதுஜா போஸ்லே ஆகியோர் பங்கேற்கின்றனர். போட்டி காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.
இந்தியாவின் 3-ம் நிலை வீராங்கனையான ருதுஜா போஸ்லே, சீன தைபேவின் லியாங்குடன் மோதுகிறார். ரியா பாட்டியா, லிதுவேனியாவின் ஜஸ்டினா மிகுல்ஸ்கைட்டுடனும் சவுஜன்யா பவிஷெட்டி, ஜப்பானின் கியோகா ஒகாமுராவுடனும் மோதுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த சாய் ஷமர்தி, ஜப்பானின் நாவோ ஹிபினோவுடனும் லட்சுமி பிரபா அருண்குமார், ஜப்பானின் யூகி நைட்டோவுடனும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். தகுதி சுற்றில் இரு ஆட்டங்களில் வெற்றி பெறும் 6 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
இதற்கிடையே பிரதான சுற்றில் கலந்துகொள்வதாக இருந்த முன்னணி வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா,பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் ஆகியோர் சென்னை ஓபன் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதில் 17-ம் நிலை வீராங்கனையான கார்சியா, அமெரிக்க ஓபனில் அரை இறுதியில் தோல்வியடைந்திருந்தார். பயண நேர திட்டமிடல் காரணமாக அவரால், சென்னை ஓபனில் கலந்துகொள்ள முடியவில்லை. அதேவேளையில் மெர்டென்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.இவர்கள் விலகியுள்ளதால் பிரதான சுற்றுக்கு கனடாவின் கரோல் ஜாவோ, கிரீஸின் டெஸ்பினா பாபாமிசைல் முன்னேறியுள்ளனர்.