

நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் விளாசி இருந்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவர் பதிவு செய்துள்ள சதம் இது. அதன் காரணமாக அவரது அபிமானிகள் அனைவரும் ‘போடு ஆட்டம் போடு’ என பண்டிகையை போன்றதொரு கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
இந்தச் சூழலில் அவரது இந்த அசத்தல் சதம் குறித்து கிரிக்கெட் ஆளுமைகள் என்ன சொல்லி உள்ளார்கள்? அவர்களது ரியாக்ஷன் என்ன என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
விராட் கோலியும் சதங்களும்
சதங்களின் சாதனை நாயகனாக கிரிக்கெட் உலகை வலம் வந்து கொண்டிருப்பவர் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் 43, டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 என மொத்தம் 70 சத்தங்களை ஆப்கன் அணிக்கு எதிராக ஆட்டம் வரை அவர் பதிவு செய்திருந்தார். ஆனால் கடந்த 2019-க்கு பிறகு அவர் ஒரு சதம் கூட பதிவு செய்யவில்லை. இதனை உள்ளூர் தொடங்கி உலக மீடியாக்கள் வரை மிகப்பெரிய விவகாரமாக பேசி வந்தன. ரசிகர்களும் அந்த 71-வது சதத்தை வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்திருந்தனர். அதுவே அவருக்கு ஒருவித அழுத்தத்தை கொடுத்திருக்கும்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் களத்தில் ரன் சேர்க்கவே தடுமாறினார். அதன் காரணமாக கிரிக்கெட் வல்லுநர்கள் அவரை விமர்சனம் செய்திருந்தனர். சிலர் அவருக்கு எதிராக கடுமையாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆதரவாகவும் என அந்த விமர்சனங்கள் நீண்டன.
இந்த சூழலில் சில நாட்கள் கிரிக்கெட் களத்தில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். அது கூட விமர்சமானது. ஆசிய கோப்பை தொடரில் நேரடியாக அணியில் இடம் பெற்றார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 34 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடுத்தடுத்து அரை சதம் பதிவு செய்தார். இலங்கை அணிக்கு எதிராக ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பி இருந்தார். இந்த இடைப்பட்ட நேரத்தில் விராட் கோலியின் சர்வதேச டி20 கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கூட விவாத பொருளாக பேசப்பட்டது.
ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் அவரது 71-வது சதம் டெஸ்ட் அல்லது ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் தான் வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் அதனை யாருமே எதிர்பார்க்காத டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் பதிவு செய்து அசத்தினார் கோலி. அவர் நேரடியாக இந்த சதத்தை பதிவு செய்திடவில்லை. நடப்பு ஆசிய கோப்பையில் இதற்கு முன்னர் நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். அந்த அப்பர் ஃபார்மை ஆப்கன் அணிக்கு எதிராகவும் தொடர்ந்தார். அதற்கு பேட் மேல் பலன் கிடைத்துள்ளது. 61 பந்துகளில் 122 ரன்கள். 12 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.
கிரிக்கெட் ஆளுமைகள் ரியாக்ஷன்
கோலி, ஃபார்ம் அவுட்டாகி தவித்து வந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக பேசிய கிரிக்கெட் ஆளுமைகள் இப்போது அவரது சதத்தை உச்சி முகர்ந்து பாராட்டியும், போற்றியும் வருகின்றனர்.
டிவில்லியர்ஸ்: “நேற்று அவரிடம் பேசிய போது ஒருவிதமான கொதிப்பு தெரிந்தது. சிறப்பான ஆட்டம் நண்பா” என தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ். அதோடு இந்த காட்சி பார்க்கவே அற்புதமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வி.வி.எஸ்.லஷ்மண்: “இது ஒரு அற்புதமான ஆட்டம். இப்படியொரு அபார ஃபார்மில் அவரை பார்ப்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா: “சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதம். என்னவொரு அபார இன்னிங்ஸ். இதற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர்” என தெரிவித்துள்ளார்.
இயன் பிஷப்: “சிலகாலம் ஆகிவிட்டது. ஆனால் விராட் கோலி மீண்டும் சதம் விளாசும் மோடுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. முதல் டி20ஐ சதம். பல பெரிய டாஸ்குககளை இது முன்னெடுத்து செல்லும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். கோலி டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என விரும்புகிறவன் நான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏஞ்சலோ மேத்யூஸ்: “தலை வணங்குகிறேன். ஃபார்ம் என்பது தற்காலிகமானது. கிளாஸ் நிரந்தரமானது. அற்புதமான ஆட்டம். தொடர்ந்து ஒளிருங்கள்” என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், விராட் கோலியை டேக் செய்து ஆர்டின் ஸ்மைலியை பதிவு செய்துள்ளது. ஹர்பஜன், யூசுப் பதான், அஞ்சும் சோப்ரா போன்றவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.