

திரிபுராவில் சாலைகள் மோசமாக இருப்பதால் தனக்கு வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ சொகுசுக் காரை திரும்ப ஒப்படைக்க ஜிம்னாஸ் டிக் வீராங்கனை தீபா கர்மகார் திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது.
ரியோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மகார், சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்தினார். 4-வது இடம் பிடித்த அவர் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார். தீபா கர்மகாரின் இந்த சாதனைக்காக ஐதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்கத்தின் தலைவர் சாமுண்டேஸ்வரையா அவருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார். ஐதராபாதில் ஆகஸ்ட் மாதம் நடந்த நிகழ்ச்சியில் தீபா கர்மகாருடன் பி.வி.சிந்து, சாக் ஷி மாலிக். பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கும் இந்த கார்கள் பரிசளிக்கப்பட்டன. இந்த கார்களின் சாவியை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண் டுல்கரின் கையில் இருந்து அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் திரிபுராவில் சாலைகள் மோசமாக இருப்பதாலும், காரை முறையாக பராமரிக்க முடியாததாலும் அதை திருப்பிக் கொடுக்க தீபா கர்மகார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தந்தை துலால் கர்மகார் கூறும்போது, “நாங்கள் கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் வசிப்ப தாக இருந்தால் அந்தக் கார் எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அகர்தலா போன்ற நகரங்களில் அந்தக் காரை ஓட்டுவதும், பராமரிப்பதும் சிரமமாக உள்ளது. அதனால் அதற்குப் பதிலாக வேறொரு காரை மாற்ற திட்டமிட்டுள்ளோம். அதனால் அந்த காரைப் பெற்றுக் கொண்டு அதற்கான தொகை யைத் தருமாறு அதைப் பரிசளித்த வர்களிடம் கூறியுள்ளோம். அதை வைத்து நாங்கள் வேறொரு காரை வாங்குவோம். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றார்.
இதுகுறித்து சாமுண்டேஸ் வரய்யா கூறும்போது, “சொகுசுக் கார் விவகாரம் குறித்து தீபா கர்ம காரிடம் விவாதிக்க உள்ளோம். அவரது வசதிக்கு ஏற்றபடி நட வடிக்கை எடுப்போம்” என்றார்.