

மொஹாலி ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங் பற்றி எதிர்மறையாகக் குறிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ் தனது பந்தயத்தில் தோற்றார்.
ஜாதவ் பந்து வீச அழைக்கப்பட்ட போது சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோருடன் நியூஸிலாந்து வர்ணனையாளர் ஸ்காட் ஸ்டைரிஸ் வர்ணனை அறையில் அமர்ந்திருந்தார். ஜாதவ்வின் பந்து வீச்சு குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்த ஸ்காட் ஸ்டைரிஸ், “ஜாதவ் இன்று விக்கெட் எடுத்தால் இந்த வர்ணனை அறையிலிருந்து வெளியேறுகிறேன், முதல் விமானத்தை பிடித்து நியூஸிலாந்துக்கே சென்று விடுகிறேன்” என்று நகைச்சுவையாக கூறினார்.
கேதர் ஜாதவ்வை பேட்ஸ்மெனாகவும், விக்கெட் கீப்பராகவுமே பலரும் அறிவர், ஆனால் கும்ப்ளே கேதர் ஜாதவ்வை ஒரு பவுலராக தயார் படுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஸ்காட் ஸ்டைரிஸ் ஜாதவ்வை பவுலராக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் அவர் கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தியது ஸ்காட் ஸ்டைரிசுக்கு கடும் ஏமாற்றம் அளித்தது.
உடனே ஸ்காட் ஸ்டைரிஸ் தான் சொன்னதை நிறைவேற்றும் விதமாக கமெண்டரி பாக்ஸை விட்டு வெளியேறினார். இது அங்கிருந்த ரவி சாஸ்திரி, மற்றும் சுனில் கவாஸ்கரிடையே சிரிப்பை வரவழைத்தது.