

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் 415 ரன்கள் குவித்தது.
அடிலெய்டில் இன்று தொடங்கிய இந்தப் போட்டி பிங்க் பந்தில் விளையாடப்பட்டது, காரணம் அடிலெய்ட் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பிங்க் பந்தில் ஆடப்படவுள்ளது.
முதல் தர கிரிக்கெட் அந்தஸ்து இந்தப் போட்டிக்கு இல்லாவிட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் நடக்கவிருப்பதை முன் கூட்டியே ஆஸ்திரேலிய அணிக்கு அறிவிப்பதாக இருந்தது தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங். காரணம் முதல் நாளிலேயே 415 ரன்களைக் குவித்தது.
8-ம் நிலையில் களமிறங்கிய குவிண்டன் டி காக் 103 பந்துகளில் 16 பவுண்ட்ரிகள் 3 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு அவுட் ஆனார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு அனுபவமற்ற ஓ’டனல், பார்ட்லெட், டாகெட் உள்ளிட்டோரை கொண்டிருந்தாலும் ஸ்டீபன் குக், ரைலி ரூசோவ் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறிய போது தென் ஆப்பிரிக்கா 19/2 என்று இருந்தது. ஆனால் டீன் எல்கர் (43), ஆம்லா (51) ஸ்கோரை 111க்கு கொண்டு சென்றனர், அப்போது எல்கர் டாக்கெட் பந்தில் அவுட் ஆனார். ஆம்லா 51 ரன்களில் ரிட்டையர்டு அவுட் ஆனார்.
ஃபாப் டுபிளெசிஸ் 8 ரன்களில் ஆஃப் ஸ்பின்னர் அர்ஜுன் நாயரிடம் ஆட்டமிழக்க, தெம்பா பவுமா 11 ரன்களில் நாயரிடம் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பிறகு டுமினி (97), டி காக் இணைந்து 167 ரன்களைக் குவித்தனர். டுமினி 97 ரன்களில் 10 பவுண்டரிகளை அடித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரயான் லீஸ் பந்தில் வெளியேறினார். வெர்னன் பிலாண்டர் 34 ரன்களை எடுக்க ரபாதா 16 ரன்களையும் மஹராஜ் 12 ரன்களையும் எடுக்க தென் ஆப்பிரிக்கா 89.5 ஓவர்களில் 415 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
குவிண்டன் டி காக் இந்த ஆட்டம் பற்றி கூறும்போது “வலைப்பயிற்சிக்கும் சற்றே கூடுதலானது” என்றார்.