

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதி ரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி வென்றது.
வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் ஏற்கெனவே நடந்த இரு போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமீம் இக்பால் 118 பந்துகளில் 118 ரன்களைக் குவித்தார். அவருக்கு உதவியாக சபீர் ரஹ்மான் 65 ரன்களை எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி, மிர்வாயிஸ் அஷ்ரப், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேச பந்துவீச்சாளர்களிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் 33.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் நவரோஸ் மங்கள் (33 ரன்கள்), ரஹ்மத் ஷா (36 ரன்கள்) ஆகியோர் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடினர். இப்போட்டியில் வங்கதேச வீரர் மொஷரப் ஹொசேன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக தமீம் இக்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.