

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றில் ரன்கள் சேர்க்க தடுமாறிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அரை சதம்அடித்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி 181 ரன்கள் சேர்த்த போதிலும் தோல்வியை சந்தித்தது.
இந்த ஆட்டம் முடிவடைந்ததும் விராட் கோலி கூறியதாவது: டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து நான் விலகிய பிறகு என்னுடன் இணைந்து விளையாடிய ஒருவர் மட்டுமே எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பி தொடர்பு கொண்டார். அவர் தான் எம்.எஸ். தோனி. பலரிடம் என்னுடைய தொலைபேசி எண் உள்ளது.
தொலைக்காட்சிகளில் பலரும் ஆலோசனைகள் வழங்குகிறார்கள். பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால் யாரிடம்எல்லாம் என்னுடைய தொலைபேசி எண் உள்ளதோ அவர்கள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.
இதுபோன்ற தருணங்களில்தான் மரியாதையும் பந்தமும் யாரிடம் உண்மையாக உள்ளது என்பது வெளிப்படும்.தோனிக்கு என்னிடமிருந்து எதுவும்தேவைப்படுவதில்லை. அதேபோலத்தான் எனக்கும். என்னால் அவர் பாதுகாப்பற்ற சூழலை உணரவில்லை. எனக்கும் அப்படித்தான்.
யாரிடமாவது ஏதாவது நான் சொல்ல விரும்பினால் அவர்களிடம் நேரடியாகச் சொல்லிவிடுவேன். எனக்கு அறிவுரைகள் கூற விரும்பினால் உலகத்தின் முன் நின்று கொண்டு கூறுவதில் எந்த மதிப்பும் இல்லை. நான் நன்றாக செயல்பட வேண்டும் என விரும்பினால் என்னிடம் நேருக்கு நேர் பேசுங்கள். இவ்வாறு விராட் கோலி கூறினார்.