

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடை பெறும் டி 20 தொடர் முடிந்த மறுநாளே இந்திய டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக் கான இந்த தொடரின் முதல் டெஸ்ட் பிப்ரவரி 23 முதல் 27 வரை புனேவில் நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் மார்ச் 4 முதல் 8 வரை பெங்களூருவிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 16 முதல் 20 வரை ராஞ்சியிலும், கடைசி டெஸ்ட் மார்ச் 25 முதல் 29 வரை தர்மசாலாவிலும் நடைபெறு கிறது.
இதில் ராஞ்சி, தர்மசாலா ஆகிய மைதானங்களில் முதன்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் பிப்ரவரி 17 முதல் 22 வரை இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோதுகிறது.
கடைசி டி 20 ஆட்டம் முடி வடைந்த பிறகு சுமார் 16 மணி நேர இடைவேளையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அந்த அணி கலந்துகொள்ளும்படி அட்ட வணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.
எனினும் ஆஸ்திரேலிய அணி 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் ஒரே அணியை அப்படியே பயன்படுத்துவது இல்லை என்பதால் அந்த அணி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்யக்கூடும். ஆஸ்திரேலிய அணி கடைசியாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடியபோது 4 போட்டிகள் டெஸ்ட் கொண்ட தொடரை முழுமையாக இந்திய அணியிடம் இழந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.