

துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்திய அணி 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி அரை சதம் விளாசி இருந்தார். துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர். பவர் பிளே ஓவர்களில் இருவரும் சிறப்பாக ரன்களை சேர்த்தனர். 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் ரோகித். தொடர்ந்து களத்திற்கு கோலி வந்தார். மறுமுனையில் ராகுல் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ரிஷப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தீபக் ஹூடா, 16 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அவுட்டானார் கோலி. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி வெற்றி பெற 182 ரன்கள் தேவை. ஷதாப் கான், 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நசீம் ஷா, முகமது ஹன்சைன், ஹாரிஸ் ராஃப், முகமது நவாஸ் போன்ற பவுலர்கள் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.