Published : 04 Sep 2022 06:34 AM
Last Updated : 04 Sep 2022 06:34 AM

கண்ணீருடன் ஓய்வுபெற்றார் செரீனா - போராட்ட வாழ்க்கை முதல் 39 கிராண்ட் ஸ்லாம் வரை..

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 46-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இந்த ஆட்டத்துடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து செரீனா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார். 41 வயதான செரீனாவின் 27 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கைஇத்துடன் முடிவுக்கு வந்தது. போட்டி முடிவடைந்ததும் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் மல்க ரசிகர்களை நோக்கி நன்றி தெரிவித்த செரீனா, அவர்கள்மீதான அன்பை இதய வடிவில் கைகூப்பி வெளிக்காட்டினார். செரீனா வில்லியம்ஸ் கூறும்போது, “நான் இன்னும் திறமையாகவே உள்ளேன். ஆனால் விளையாட்டுக்கு அதையும் தாண்டி அதிகம் தேவையாக உள்ளது.

ஒரு தாயாக நான் எனது பணிகளை செய்ய தயாராகிவிட்டேன். டென்னிஸ் பயணம் எனது வாழ்க்கையில் நம்ப முடியாததாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாக உலக அரங்கில் நான் இன்னும் இளமையாகவே இருக்கிறேன். நடந்துகொண்டிருக்கும்போது வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். எனக்கு முன்னால் ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. ஓய்வு முடிவை பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் என்ன நடக்கும் என்று தெரியாது.

நான் செரீனாவாக இங்கு இருப்பதற்குக் காரணம் என் சகோதரி வீனஸ். அவள் இல்லாவிட்டால் நான் செரீனாவாக இருந்திருக்க முடியாது. எனவே இந்த நேரத்தில் வீனஸுக்கு நன்றி கூற விரும்புகிறேன். இவை அனைத்தும் என் பெற்றோரிடமிருந்துதான் தொடங்கியது. அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். என் கண்களில் இப்போது இருப்பது ஆனந்தக் கண்ணீர் என்றே நினைக்கிறேன். இது என் வாழ்வின் மகிழ்ச்சியான பயணம்” என்றார்.

போராட்ட வாழ்க்கை..

செரீனாவின் ஒன்று விட்டசகோதரியான யதுன் டாபிரின்ஸ், 2003-ம் ஆண்டு அவர்களது சொந்த ஊரான காம்ப்டன் பகுதியில் ஒரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்தான் செரீனாவின் தனிப்பட்ட உதவியாளராக நீண்டகாலமாக இருந்தார்.

2010-ம் ஆண்டு விம்பிள்டன் வெற்றிக்குப் பிறகு ஜெர்மனியிலுள்ள ஒரு ஓட்டலில் செரீனாவின் பாதத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன. அவர் எழுந்து நடக்க 20 வாரங்களானது. மேலும் 2011-ல் அவரது நுரையீரலில் ரத்தம் கட்டியதால் அவரது உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் அவர் 3 பெரிய போட்டிகளை தவறவிட்டார். ஓராண்டாக களத்திலேயே இல்லாத நிலை ஏற்பட்டது.

எட்டாக்கனியான 24-வது பட்டம்..

மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, மேலும் ஒருகிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தால் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார். ஆனால் கடந்த ஆறு வருடங்களாக போராடியும் செரீனாவால் அந்த சாதனையை சமன் செய்ய முடியாமல் போனது. செரீனா கடைசியாக 2017-ல் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருந்தார். அதன் பிறகு நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளில் விளையாடியும் அவரால் வெற்றி பெற முடியாமல் போனது.

7 ஆண்டில் நம்பர் 1

செரீனா வில்லியம்ஸ் 1981-ல் செப்டம்பர் 26-ம் தேதி அமெரிக்காவின் கருப்பின குடும்பத்தில் பிறந்தார். 1995-ல் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் களமிறங்கினார். அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 2002-ல் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையானார்.

39 கிராண்ட் ஸ்லாம்

ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் 2 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக செரீனாவின் கரங்களை அலங்கரித்த கிராண்ட் ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 39 ஆகும்.

யார் இந்த அஜ்லா...

செரீனாவை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச் டபிள்யூடிஏ அரங்கில் எந்த ஒரு கோப்பையையும் வென்றது இல்லை. 29 வயதான அவர், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கால் இறுதி சுற்றை கூட கடந்தது இல்லை. தற்போது செரீனாவை வீழ்த்திய கடைசி வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார்.

மிட்செல் ஒபாமா வாழ்த்து..

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா தனது ட்விட்டர் பதிவில், “செரீனாவின் அற்புதமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள், காம்ப்டனைச் சேர்ந்த ஒரு இளம் பெண் எல்லா காலத்திலும் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக வளர்ந்து வருவதைப் பார்க்க முடிந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

செரீனா வென்ற கோப்பைகள், பரிசுகள் குறித்த விவரங்கள்:

வென்ற பரிசுத் தொகை - ரூ.755.72 கோடி

வெற்றி 858, தோல்வி 156

டிபிள்யூடிஏ பட்டங்கள் 73

கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் 23

ஆஸ்திரேலிய ஓபன் 7 (2003, 2005, 2007, 2009, 2010, 2015, 2017)

பிரெஞ்சு ஓபன் 3 (2002, 2013, 2015)

விம்பிள்டன் 7 (2002, 2003, 2009, 2010, 2012, 2015, 2016)

அமெரிக்க ஓபன் 6 (1999, 2002, 2008, 2012, 2013, 2014)

டிபிள்யூடிஏ பைனல்ஸ் 5 (2001, 2009, 2012, 2013, 2014)

பெடரேஷன் கோப்பை 1 (1999)

ஒலிம்பிக்: 2012-ல் ஒற்றையர் பிரிவில் தங்கம் மற்றும் 2000, 2008, 2012-ம் ஆண்டுகளில் வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம்தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x