

அமெரிக்காவின் சான் அண்டோனியோ நகரத்தை சேர்ந்த பிரபல என்.பி.ஏ. (அமெரிக்காவில் உள்ள தேசிய கூடைப்பந்து சங்கம்) வீரர் ஐசையா தாமஸ் புதன்கிழமை சென்னை வருகிறார்.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே கூடைப்பந்து பற்றிய ஆர்வத்தை ஊக்குவிக்க அவர் சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு வருகிறார். சென்னை மாநகராட்சியும் சான் அண்டோனியா நகரமும் ’சிஸ்டர் சிட்டிஸ்’ ஆக உள்ளன. அதாவது இரு நகரங்களுக்கு இடையேயும் கலாச்சார, அனுபவ பரிமாற்றங்கள் நடைபெறும்.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியும், மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரும் சான் அண்டோனியோவுக்கு சென்றிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது அங்கிருக்கும் விளையாட்டு வீரர் சென்னைக்கு வரவுள்ளார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “மாநகராட்சிப் பள்ளி மாணவர்களிடம் பல திறமைகள் உள்ளன. அவை என்ன என்று கண்டறிய இது போன்ற வாய்ப்புகள் தேவை. அதே நேரம் சான் அண்டோனியோவுடனான நமது உறவையும் வலுப்படுத்திக் கொள்ளலாம். தாமஸ் இங்கு வரும்போது, மாநகராட்சிப் பள்ளியில் உள்ள கூடைப்பந்தாட்ட மைதானத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலும், கூடைப் பந்தாட்ட பயிற்சியும் நடைபெறும். இதன் பிறகு, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, கூடைப்பந்தாட்ட பயிற்சி அளிப்பது பற்றி ஆலோசிக்கப்படும்” என்றார்.