Published : 04 Sep 2022 06:38 AM
Last Updated : 04 Sep 2022 06:38 AM
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தற்போது, 2-வது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரையில் டாப் ஆர்டர் பேட்டிங் இன்னும் வலுப்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கு பதிலாக தீபக் ஹூடாவை களமிறக்கக்கூடும். ஹாங்காங் அணிக்கு எதிராக 26 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவிடமிருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளதால் அவரது இடத்தில் அக்சர் படேல் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியா களமிறங்குவதால் ரிஷப் பந்த்துக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும்.
பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதில் தீவிரம் காட்டக்கூடும். ஹாங்காங் அணிக்கு எதிராக முகமது ரிஸ்வான், பஹர் ஸமான், குஷ்தில் ஷா ஆகியோர் சிறப்பாக விளையாடியிருந்தனர்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் தரக்கூடும். பாபர் அஸமும் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT