

நியூயார்க்: டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு அறிவித்த செரீனா வில்லியம்ஸ், நேற்று தனது கடைசி போட்டியில் விளையாடி கண்ணீர் மல்க விடைபெற்றார்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதோடு கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். டென்னிஸ் உலகை தங்கள் ராக்கெட்டுகளால் (பேட்) ஆட்சி செய்த வில்லியம்ஸ் சகோதரிகளில் இளையவர் இவர்.
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அவர் பங்கேற்று விளையாடும் கடைசி அமெரிக்க ஓபன் தொடராக அமைந்தது. ஆம், ஏற்கனவே அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப் போட்டியில் டேங்கா கோவினிக்கை எதிர்த்து அவர் விளையாடினார். 6-3, 6-3 என நேர் செட் கணக்கில் இந்தப் போட்டியில் செரீனா வெற்றி பெற்றார்.
2-வது சுற்றில் முதல் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், பிரான்ஸின் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை எதிர்த்து விளையாடினார். இதில் மேத்வதேவ் 6-2, 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்று நடந்த மூன்றாவது சுற்றில் குரோஷிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிக்கை எதிர்த்து விளையாடியவர், 5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். செரீனா விளையாடும் கடைசித் தொடர் என்பதால் நேற்றைய ஆட்டம் பரபரப்பாகவே இருந்தது. தோல்வியால் செரீனாவின் 27 ஆண்டுக்கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்தது. களத்தில் இருந்த அவரின் ரசிகர்கள் பிரியாவிடை அளித்தனர்.
இதன்பின் பேசிய செரீனா, "எனது சகோதரி வீனஸ் மட்டுமே நான் செரீனாவாக உங்கள் முன் நிற்பதற்கு முழு காரணம். வீனஸ் இல்லையென்றால் இன்று நான் இங்கு இல்லை. இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். இப்போது என் கண்களில் இருப்பது ஆனந்த கண்ணீர். இது என் வாழ்வின் மகிழ்ச்சியான பயணம்" என்று நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க பேசினார்.