Published : 02 Sep 2022 03:29 PM
Last Updated : 02 Sep 2022 03:29 PM

அமெரிக்க ஓபன் | மூக்கில் பட்ட பேட்... காயத்துடன் விளையாடிய நடால் 3-ம் சுற்றுக்கு முன்னேற்றம்

ரஃபேல் நடால் | கோப்புப் படம்

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்கான போட்டியில் விளையாடியபோது தனது ராக்கெட் (பேட்) தவறுதலாக மூக்கை பதம் பார்த்த காரணத்தால் அனுபவ வீரர் ரஃபேல் நடால் காயமடைந்துள்ளார். அதன் காரணமாக அவரது மூக்கிலிருந்து உதிரம் வெளியேறி உள்ளது. அது குறித்து அவர் போட்டி முடிந்ததும் பேசி இருந்தார்.

36 வயதான நடால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆடவர் டென்னிஸ் உலகை ஆட்சி செய்யும் மும்மூர்த்திகளில் ஐவரும் ஒருவர். காயம் காரணமாக களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இவர் மாறி, மாறி இருந்து வருகிறார். கடந்த ஜூன் இறுதியில் நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் காயம் காரணமாக ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் வாக்-ஓவர் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், அவர் நடப்பு அமெரிக்க ஓபன் தொடரில் விளையாடி வருகிறார். முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ரிங்கி ஹிஜிகதாவை வென்றார். தொடர்ந்து இரண்டாவது சுற்றில் ஃபேபியோ ஃபோக்னினியை எதிர்த்து விளையாடினார். இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில் 2-6 என இழந்தார். இருந்தாலும் அடுத்த மூன்று செட்டுகளையும் வென்று அசத்தினார்.

இந்தப் போட்டியின் நான்காவது செட்டில் பந்தை தடுத்து ஆடும்போது அவரது ராக்கெட் டென்னிஸ் கோர்ட்டின் தரையில் பட்டு, பின்னர் அதே வேகத்தில் மூக்கை தாக்கியது. அதனால் அவருக்கு மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. காயத்திற்கு பிறகு சில நிமிடம் தரையில் படுத்திருந்தார். பின்னர் அவருக்கு டிரெஸ்ஸிங் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த செட்டையும் கைப்பற்றினார் அவர். அதன் மூலம் வெற்றி அவர் வசமானது.

“முதலில் கொஞ்சம் மயக்கமாக இருந்தது. இப்போது ஓகே. லேசாக வலிக்கிறது. இதற்கு முன்னர் கோல்ஃப் பேட் பட்டு மூக்கில் காயம் பட்டுள்ளது. டென்னிஸ் களத்தில் இதுவே முதன்முறை” என ஆட்டம் முடிந்ததும் நடால் சொல்லி இருந்தார். நாளை நடைபெறும் மூன்றாவது சுற்றுப்போட்டியில் பிர்னாஸ் நாட்டு வீரரை எதிர்த்து விளையாடுகிறார் நடால்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x