

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது அந்த அணி வீரர்களுக்கு '2D, D5' ரகசிய குறியீடு அடங்கிய கோடுகள் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து அனுப்பப்பட்டது. அந்த குறியீடு அடங்கிய படங்கள் இப்போது வைரலாகி உள்ளன.
நடப்பு ஆசிய கோப்பையின் முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேற்று பலப்பரீட்சை செய்தன. இரு அணிக்கும் இது வாழ்வா, சாவா என்ற நிலையில் நடைபெற்ற போட்டி. இதில் வெற்றி பெறும் அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் பவுலர்கள் இறுதி ஓவர்களின்போது எக்ஸ்ட்ரா ரன் கொடுத்ததே வீழ்ச்சிக்கு காரணம்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி களத்தில் ஃபீல்ட் செய்தபோது அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் '2D, D5' என சில ரகசிய குறியீடுகளை டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வீரர்களின் பார்வையில் படும்படி வைத்திருந்தார். அந்த செயல்தான் பலரது புருவங்களையும் உயர்த்த செய்துள்ளது.
‘அப்போது களத்தில் கேப்டன் எதற்கு?’, ‘இது கிரிக்கெட்டா? கால்பந்தாட்டமா?’ என்றெல்லாம் கூட நெட்டிசன்கள் சில கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், சில்வர்வுட் இதற்கு முன்னரும் இதே போல செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் கடந்த 2020 வாக்கில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்தபோது இதேபோல டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ரகசிய குறியீடுகளை அனுப்பி உள்ளார். அது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடர். அப்போது இதில் தவறு ஏதும் கிடையாது என சொல்லி இருந்தார் இங்கிலாந்து அணியின் அப்போதைய கேப்டன் மோர்கன்.
“இது ராக்கெட் சயின்ஸ் எல்லாம் கிடையாது. மற்ற அணிகளும் இதுபோல செய்து வருகின்றன. இது களத்தில் இருக்கும் சூழலுக்கு ஏற்ப எப்படி செயல்படலாம் என கேப்டனுக்கு கொடுக்கப்படும் ஆலோசனை மட்டும்தான். எப்படி கேப்டன்சி செய்ய வேண்டும் என சொல்வது கிடையாது” என சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.