பேட்டிங்கில் எந்த இடத்திலும் களமிறங்க முடியும் - மனம் திறக்கும் சூர்யகுமார் யாதவ்

பேட்டிங்கில் எந்த இடத்திலும் களமிறங்க முடியும் - மனம் திறக்கும் சூர்யகுமார் யாதவ்
Updated on
1 min read

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 192 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 13 ஓவர்களில் 94 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. சூர்யகுமார் யாதவின் அதிரடியால் அடுத்த 7 ஓவர்களில் இந்திய அணி 98 ரன்களை குவித்திருந்தது.

சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “எந்த இடத்தில் களமிறங்கி பேட்டிங்செய்யக் கூறினாலும் அதற்கு தகுந்தவாறு என்னை மாற்றிக்கொள்வேன். பயிற்சியாளர், கேப்டனிடம் என்னை எந்த பேட்டிங் வரிசையிலும் அனுப்புங்கள், ஆனால் விளையாடவிடுங்கள் என்று மட்டும் கூறியுள்ளேன்.

ஹாங்காங் போட்டியில் முதலில் பேட் செய்வதற்கு ஆடுகளம் சவாலாக இருந்தது. முதலில் பேட் செய்யும் போது எந்த வகையிலான இலக்கை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து அதனை கொடுக்க முயற்சி செய்கிறோம். அணியில் ஒவ்வொருவரின் பங்கும் தெளிவாக உள்ளது. என் பணியை சிறப்பாக முடிக்க முடியாவிட்டால் ரிஷப் பந்த் செய்வார்.

அவர் தவறினால் தினேஷ் கார்த்திக் செய்து முடிப்பார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக விளையாடக் கூடியவர். முதல் இன்னிங்ஸில் தேவையான பலம் எங்களிடம் உள்ளது. களத்தில் விராட் கோலியுடன் உரையாடிய போது, வழக்கமான உனது ஆட்டத்தை விளையாடு என்று கூறினார். எனது திட்டம் தெளிவாக இருந்தது. ரசித்து விளையாடினேன். இவ்வாறு அவர் கூறினார்.

இன்றைய ஆட்டம்

பாகிஸ்தான் – ஹாங்காங்

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in