

லீக் 1 தொடரில் டூலூஸ் அணிக்கு எதிராக PSG சார்பில் எம்பாப்பே மற்றும் நெய்மர் கோல் ஸ்கோர் செய்ய அசிஸ்ட் செய்து உதவியுள்ளார் லியோனல் மெஸ்ஸி. அவரது செயலுக்காக எதிரணியின் ஆதரவாளர்கள் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கால்பந்தாட்ட களத்தில் மாயமானை போல ஓடி, கோல் பதிவு செய்வார் மெஸ்ஸி. இதுதான் அவரது வழக்கமும் கூட. ஆனால் நடப்பு லீக் 1 தொடரில் டூலூஸ் அணிக்கு எதிராக தனது அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய உதவியுள்ளார்.
PSG கிளப் அணியுடன் மெஸ்ஸிக்கு இது இரண்டாவது சீசன். இருந்தும் இந்த முறை தான் அந்த அணி நிர்வாகம் அவரிடம் இருந்து எதிர்பார்த்த அந்த மேஜிக் நிகழத் தொடங்கியுள்ளது. மெஸ்ஸி, நெய்மர் மற்றும் எம்பாப்பே என மூவரது கூட்டணியும் கைகூடி வந்துள்ளது இதற்கு காரணம். அந்த அணி நடப்பு சீசனில் 5 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 1 போட்டியை டிரா செய்துள்ளது.
டூலூஸ் அணிக்கு எதிராக இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தின் 37 மற்றும் 50-வது நிமிடங்களில் நெய்மர் மற்றும் எம்பாப்பே கோல் பதிவு செய்ய மெஸ்ஸி பந்தை லாவகமாக அவர்களுக்கு தள்ளி உதவி செய்தார். அது கோலாகவும் மாறியது. அதன் காரணமாக மைதானத்தில் இந்த ஆட்டத்தை பார்க்க குவிந்திருந்த ரசிகர்கள் (எதிரணி ஆதரவாளர்கள் உட்பட) அனைவரும் எழுந்து நின்று அவருக்கு கர ஒலி எழுப்பி பாராட்டி இருந்தனர். இதே போல அதிரிபுதிரி ஆட்டத்தை அவர் வரும் நாட்களிலும் மேற்கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.