

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் சீனியர் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வைரக்கற்கள் பதித்த காலணியை (ஷூ) அணிந்து விளையாடி உள்ளார். இது அவர் பங்கேற்று விளையாடும் கடைசி அமெரிக்க ஓபன் தொடராக அமைந்துள்ளது. அவர் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதே இதற்கு காரணம்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதோடு கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். டென்னிஸ் உலகை தங்கள் ராக்கெட்டுகளால் (பேட்) ஆட்சி செய்த வில்லியம்ஸ் சகோதரிகளில் இளையவர் இவர்.
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப் போட்டியில் டேங்கா கோவினிக்கை எதிர்த்து அவர் விளையாடினார். 6-3, 6-3 என நேர் செட் கணக்கில் இந்தப் போட்டியில் செரீனா வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தனது ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
அதோடு இந்தப் போட்டியில் அவர் அணிந்து விளையாடிய ஆடை மற்றும் காலணியும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த தொடருக்காக பிரத்யேகமாக வைரக்கற்கள் பதித்த கருப்பு நிற ஷூவை அவர் அணிந்திருந்தார். இந்த ஷூவை நைக் நிறுவனத்துடன் இணைந்து அவர் வடிவமைத்துள்ளார். அதில் லேஸ் கட்டும் பகுதியில் ‘Mama’ மற்றும் ‘Queen’ என பிரத்யேகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.