

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மகளிர் இரட்டையர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்திருக்கிறார்.
இந்த வருட துவக்கம் முதல் பல்வேறு மகளிர் இரட்டையர் பிரிவுப் போட்டிகளில் பங்கேற்ற சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்காவின் சின்சினாட்டி மாஸ்டர் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றார்.
மேலும் பல்வேறு போட்டிகளில் அரையிறுதி வரை சானியா முன்னேறினார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு மகளிர் இரட்டையர் பிரிவுக்கான ஏடிபி டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் தொடர்ந்து 81வது வாரமாக சானியா மிர்சா முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாம் இடத்தில் பிரான்சின் கரோலின் கிரேசியா உள்ளார். மூன்றாம் இடத்தில் பிரான்ஸின் கிரிஸ்டினாவும், நான்காம் இடத்தில் சானியாவின் நட்சத்திர இணையான மார்டினா ஹிங்கிஸ் உள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் நீடிப்பது குறித்து சானியா மிர்சா கூறும்போது, "தொடர்ந்து இரண்டாவது முறையாக மகளிர் இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் நீடிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பயணம் அற்புதமாக இருந்தது" என்று கூறினார்.