இந்திய அணி முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் ஏன்? - 3 காரணங்கள்

விக்கெட் கீப்பிங் பணியில் தினேஷ் கார்த்திக்.
விக்கெட் கீப்பிங் பணியில் தினேஷ் கார்த்திக்.
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் அணியின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் (டிகே) இருக்கிறார் என்பதை அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை குரூப் சுற்றுப் போட்டியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கான மூன்று காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

37 வயதான தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2004 வாக்கில் அறிமுகமானவர். சர்வதேச கிரிக்கெட்டில் இவருக்கான வாய்ப்பு ஆன் மற்றும் ஆஃப் என மாறி மாறி இருந்து வருகிறது. இனி டிகே அவ்வளவுதான் என சொன்னால் அடுத்த நொடியே கம்பேக் கொடுத்து மாஸ் காட்டுவார். திடீரென வர்ணனை பணியை செய்வார். ஐபிஎல் களத்தில் கேப்டனாக இருப்பார். இப்போது இந்திய டி20 அணியில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் மொத்தம் 48 போட்டிகளில் விளையாடி உள்ளார். 40 இன்னிங்ஸில் பேட் செய்து 592 ரன்களை எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 139.95. இதில் 19 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக பெவிலியன் திரும்பி உள்ளார். இது தவிர ஐபிஎல் களத்தில் 229 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 4376 ரன்கள் ஸ்கோர் செய்துள்ளார்.

ரிஷப் பந்த் அல்லது டிகே? - இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஆடும் லெவனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பந்த் அல்லது டிகே என இருவரில் யாரேனும் ஒருவர் மட்டுமே விளையாட வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் சொல்லி இருந்தனர். அதுதான் நடந்தது. ஆனால் பந்த் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. டிகே இடம் பெற்றார். அவரை ஆடும் லெவனில் தேர்வு செய்தது ஏன் என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி இருந்தனர். சிலர் பந்த் ரொம்ப பாவம் என்றெல்லாம் பதிவிட்டிருந்தனர். இது இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையில் பலன் அளிக்குமா என்றெல்லாம் கேள்வி எழுந்தது.

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதே அவருடைய ஃபினிஷர் ரோலுக்காக தான். இதனை பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் செய்து காட்டும் வாய்ப்பு அமையவில்லை. இருந்தாலும் இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது பணியை அவர் சிறப்பாக செய்திருந்தார். அந்த தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருக்கும். ஐந்தாவது விக்கெட்டிற்கு கூட்டு சேர்ந்த டிகே மற்றும் பாண்டியா எதிரணியின் பந்துவீச்சை போட்டுத் தாக்கி இருப்பார்கள். அது மாதிரியான ஆட்டத்தை அவரிடமிருந்து வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். அணியில் அவரது ரோலும் இதுதான்.

வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அபார ஆட்டம்: டிகே வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தரமான ரெக்கார்டை கொண்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 258 ரன்களை குவித்துள்ளார். இதில் அவரது சராசரி 86. ஸ்ட்ரைக் ரேட் 224. பெரும்பாலும் டெத் ஓவர்களில் கேப்டன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை தான் பந்து வீசி சொல்லி பணிப்பார்கள். அப்போது டிகே இந்திய அணிக்காக பேட் செய்வது அணிக்கு சாதகமானதாக இருக்கும். சுழற்பந்து வீச்சுக்கு எதிராகவும் அவர் சூதானமாக விளையாடுவார்.

அனுபவம் பேசும்: டி20 கிரிக்கெட்டில் பிரஷர் மிகவும் அதிகம். இது மாதிரியான பிரஷர்களை அனுபவ ரீதியாக ஹேண்டில் செய்துள்ள வீரராக டிகே உள்ளார். இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டியில் இருந்து டி20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை பக்கத்தில் இருந்து பார்த்து வருபவர் அவர்.

முக்கியமாக ஃபினிஷர் ரோல்தான் இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் சாம்பியன் பட்டம் பெரிதும் உதவ உள்ளது. அந்த ரோலில் தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் விளையாடுவது அவசியம். ஜடேஜா ஆடும் லெவனில் நிலவும் இடது கை - வலது கை பேட்ஸ்மேன் காம்பினேஷனுக்கு மிடில் ஓவரில் உதவி வரும் நிலையில் டிகேவை விளையாட வைப்பதுதான் சரியான சாய்ஸாக இருக்கும்.

அசத்தல் ஃபார்ம்: முக்கியமாக டிகே இப்போது சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறார். நடப்பு ஆண்டில் அவரில் விளையாடியுள்ள 14 சர்வதேச டி20 இன்னிங்ஸில் 5 முறை பத்து பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு விளையாடி உள்ளார். அதில் 30, 55, 12, 41* மற்றும் 7 ரன்கள் அடங்கும். ஐபிஎல் 2022 சீசனில் அசத்தலான ஃபார்மை வெளிப்படுத்தினார். அதை அப்படியே இப்போது சர்வதேச களத்திலும் கேரி செய்து வருகிறார். விக்கெட் கீப்பிங் பணியையும் அவர் கவனிப்பதால் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக அவரது ஆட்டத்தை பொறுத்தே இது அமையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in