

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் முடிவில், நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
316 ரன்களுக்கு முதல் இன்னிங்க்ஸை இந்தியா முடித்த நிலையில், டாம் லேதம், மார்டின் கப்டில் ஆகியோர் நியூஸிலாந்து இன்னிங்க்ஸை துவக்கினர். இன்னிங்ஸின் 2-வது ஓவரிலேயே லேதம் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கப்டிலும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையில் நியூஸிலாந்து 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்க, 2-வது ஓவரில் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை தடுத்தாட முயன்ற நிக்காலஸ் ஆட்டமிழந்தார். இதற்கு பின் ஜோடி சேர்ந்த டெய்லர் மற்றும் ரான்க்கி இருவரும் பொறுமையாக ஆடினர். பார்ட்னர்ஷிப்பில் 62 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரான்க்கி (35 ரன்கள்) ஜடேஜாவின் பந்தில் லெக் பிஃபோர் முறையில் ஆட்டமிழந்தார். அப்போது மழையால் ஆட்டம் தடைபட்டது.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்களுக்குப் பிறகு ஆட்டம் தொடர இந்தியாவின் பந்துவீச்சு நியூஸிலாந்தை திணறடித்தது. தொடர்ந்து டெய்லர் (36 ரன்கள்), ஒரே ஓவரில் சாண்ட்னர் (11 ரன்கள்), ஹென்றி (0 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த மூன்று விக்கெட்டுகளையும் புவனேஷ்குமார் வீழ்த்தி மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
128 ரன்கள் 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் இன்றைய ஆட்டம் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.
முன்னதாக இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இந்திய அணிக்கு சாஹா பேட்டிங்கில் நம்பிக்கை அளித்தார். ஜடேஜா 14 ரன்களுக்கு ஜடேஜா, புவனேஷ்குமார் குமார் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், கடைசி விக்கெட்டுக்கு ஷமியுடன் ஜோடி சேர்ந்து 35 ரன்கள் அடித்தார். சாஹா 46 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தைக் கடந்தார்.
ஷமி 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் 316 ரன்கள் எடுத்திருந்தது. சாஹா ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்திருந்தார்.