இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ்: பிசிசிஐ ஒப்புதல்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ்: பிசிசிஐ ஒப்புதல்
Updated on
1 min read

நடுவர் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை இங்கிலாந்துக்கு எதிராக வரவிருக்கும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்த பிசிசிஐ ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கூறியதாவது: “பிசிசிஐ-யின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஹாக் ஐ ஒப்புக் கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேம்படுத்தப்பட்ட டி.ஆர்.எஸ். முறை சோதனை அடிப்படையில் இங்கிலாந்து தொடரில் பயன்படுத்தப்படவுள்ளது.

இது எப்படி செயல்படுகிறது என்பதையும் அது குறித்த கருத்துகளையும் ஆராய்ந்த பிறகு தொடர்ச்சியாக பயன்படுத்துவது பற்றி முடிவெடுக்கப்படும்” என்றார்.

டி.ஆர்.எஸ். முறையில் இந்தியாவின் பிரச்சினை என்னவெனில் எல்.பி.தீர்ப்புகளில் பந்து கால்காப்பைத் தாக்கிய பிறகு அது ஸ்டம்பைத்தாக்குமா என்பது பற்றிய ‘பந்து செல்லும் திசை தடமறியும் முறை’ பற்றியதே. தற்போது உயர் தொழில்நுட்ப கேமராக்கள் உதவியுடன் இது மேலும் துல்லியமாக்கப்பட்டு களநடுவர் தீர்ப்பை அங்கீகரிக்கும் கடைசிபட்ச முடிவு இல்லாமல் செய்வதே இதன் நோக்கமாகும்.

முன்னதாக ஆபரேட்டர் பந்து ஒன்றின் தடத்தை காண தவறியிருக்கலாம், இதனால் எல்.பி.தீர்ப்புகள் கொடுக்கப்படாமல் இருந்துள்ளன. ஆனால் தற்போது ஹாக் ஐ அனைத்து பந்துகளின் வீடியோ பதிவுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும். எனவே ஆபரேட்டர் பந்தைத் தடம்காண தவறியிருந்தாலும் பதிவு செய்யப்பட்ட இமேஜ்களிலிருந்து மீட்டெடுத்து பந்தின் தடத்தைக் காண முடியுமாறு தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ஒருநாள் கேப்டன் தோனி, டெஸ்ட் கேப்டனாக இருக்கும் போது டி.ஆர்.எஸ். 100% துல்லியத்தை எட்டினால்தான் பயன்படுத்த முடியும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in