

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராப் போட்டு, அதனை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப்-க்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
நடப்பு ஆசிய கோப்பையின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது கோலிக்கு 100-வது சர்வதேச டி20 போட்டியாகும்.
இந்தப் போட்டியில் அவர் 35 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அவரது இன்னிங்ஸ். இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் அவரது இந்திய ஜெர்சியில் அவரின் ஆட்டோகிராப்பை போட்டு, அதனை பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் இடம் கொடுத்துள்ளார் கோலி. அவரும் அதனை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கிறார்.
இதற்கு முன்னர் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியையும் ராஃப் அன்பளிப்பாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.