

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறிய இலக்கை விரட்ட முடியாமல் தோல்வி தழுவியதற்கு ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையே காரணம் என்கிறார் கேப்டன் தோனி.
“கூட்டணி அமையும் போதெல்லாம் விக்கெட்டுகளை சீராக இழந்து வந்தோம். இத்தகைய இலக்குகளைத் துரத்தும் போது விக்கெட்டுகளை இழக்கக் கூடாது. ஏனெனில் ரன்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடைசியில் ஓவருக்கு 6-7 ரன்கள் தேவைப்பட்டால் கூட பிரச்சினையில்லை இலக்கை எட்டிவிட முடியும். ஆனால் நம் பிரச்சினை என்னவெனில் சீராக விக்கெட்டுகளை இழந்ததுதான். 41-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தோம்.
இது ஏதோ ஒரு பேட்ஸ்மென் தோல்வி பற்றியது அல்ல. முழுதும் விக்கெட்டுகளை இழந்து வந்ததாகவே நான் கருதுகிறேன். இன்னும் 10% கூடுதலாக பங்களிப்பு செய்திருந்தால் நாம் வெற்றி பெற்றிருக்கலாம் என்று எந்த ஒரு பேட்ஸ்மெனும் கூறமுடியும். எனவே இது ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையின் பொறுப்பு. பவுலர்கள் நன்றாகச் செயல்பட்டனர்.
இந்தப் பிட்சில் பகல் வேளையில் பேட் செய்வது சிறப்பானது. ஏனெனில் ஆட்டம் செல்லச்செல்ல பிட்ச் மந்தமாக தொடங்கியது. பவுன்ஸும் சீராக இல்லை. ஓரிரண்டு விக்கெட்டுகளையும் இழக்கும் போது அது ரன் விகிதத்தை மந்தப்படுத்துகிறது. பிறகு ஒரு கூட்டணி அமைகிறது பிறகு விக்கெட்டுகள் விழுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் சரிவிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.
நம் பேட்ஸ்மென்களில் யாராவது ஒருவர் 15 நிமிடங்கள் கூடுதலாக பேட் செய்திருந்தால் நாம் வென்றிருப்போம். பவுலர்கள் நன்றாக வீசினர். தொடக்கத்தில் அவர்கள் பேட்ஸ்மென்களை கட்டுப்படுத்துவது கொஞ்சம் கடினமாக இருந்தது. அவர்கள் முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடினர். கேன் வில்லியம்சனுக்கு 2 கேட்ச்களை விட்டோம் என்பதையும் மறந்து விட வேண்டாம். அதுவும் ஒரு காரணம். ஒட்டுமொத்தமாக 240-245 ரன்களில் மட்டுப்படுத்தியது மகிழ்ச்சியே. இதனை எளிதில் விரட்டியிருக்கலாம்.
ஜஸ்பிரித் பும்ரா தனது சர்வதேச கிரிக்கெட்டை ஆடத் தொடங்கியிதிலிருந்தே தான் நினைத்த போது சரளமாக யார்க்கர்களை வீசி வருபவர். இதனால்தான் அவரை நான் மிகவும் நம்பி ஆதரவளிக்கிறேன். நிறைய தருணங்களில் யார் எப்படி வீசுகிறார்கள் என்பதை வைத்து கடைசி ஓவர்களை வீசப்போவது யார் என்பதை தீர்மானிப்பேன், ஆனால் பும்ரா வந்த பிறகு எந்த சூழலிலும் கடைசி ஒவர்களை அவரிடம் கொடுக்க முடிகிறது. அவர் அப்படித்தான் பயிற்சி செய்தார். அவருடைய பந்து வீச்சு முறையும் வழக்கத்திலிருந்து மாறுபட்டது. சீராக யார்க்கர்களை வீசும் அவருக்கு பாராட்டுக்கள்” என்றார் தோனி.