

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆஃப் ஸ்பின்னர் சசித்ர சேனநாயகே பந்து வீச்சு முறையற்றதாக இருப்பதாக புகார் எழுப்பப்பட்டுள்ளது.
லார்ட்சில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இவர் வீசியது பந்து வீச்சு முறைகளுக்குப் புறம்பாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டம் முடிந்தவுடன் கள நடுவர்களான இராஸ்மஸ் மற்றும் இயன் கோல்ட் ஆகியோர் இந்தப் புகாரை தொலைக்காட்சி நடுவரிடம் அறிக்கையாக புகார் அளித்தனர்.
4வது ஒருநாள் போட்டியில் இவர் வீசிய பல பந்துகள் சந்தேகத்திற்கிடமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே அவர் 21 நாட்களில் பரிசோதனைச் சாலைக்கு அனுப்பப்படவுள்ளார். ஆனால் அவர் பரிசோதனைகளின் முடிவு வெளியாகும் வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடலாம்.
2011ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரின் போதே இவரது பந்து வீச்சு முறை மீது சந்தேகங்கள் எழுந்தது. அதன் பிறகு அவர் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி பெர்த்தில் இவரது பந்து வீச்சு முறை சரிபார்க்கப்பட்டு, இவரது பந்து வீச்சு முறையில் பிரச்சினையில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிராக நடப்பு ஒருநாள் தொடரில் இவரது சிக்கன விகிதம் ஓவருக்கு 3.82 ரன்களே. மேலும் இவர் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அதிகமும் இவர் பவர்பிளேயில் பந்து வீசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.