

துபாய்: தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றியுள்ளார் பாகிஸ்தான் அணியின் பவுலர் நசீம் ஷா.
ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றான குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இன்னிங்ஸை தொடங்கினர்.
பாகிஸ்தான் சார்பில் முதல் ஓவரை 19 வயதான அறிமுக வீரர் நசீம் ஷா வீசினார். அவருக்கு இது தான் முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி. அவர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் இந்திய பேட்ஸ்மேன் ராகுலை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அந்த ஓவரின் நான்காவது பந்து கோலியின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியிருந்தது. இருப்பினும் அதை கேட்ச் பிடிக்க தவறினார் ஜமான்.