IND vs PAK | புவனேஷ்வர், பாண்டியா அசத்தல் பந்துவீச்சு; 147 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்

IND vs PAK | புவனேஷ்வர், பாண்டியா அசத்தல் பந்துவீச்சு; 147 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்
Updated on
2 min read

துபாய்: இந்திய அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 19.5 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி உள்ளது. இந்திய அணியின் பவுலர்கள் அசத்தலாக பந்து வீசி பாகிஸ்தானை கட்டுப்படுத்தி இருந்தனர்.

ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றான குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். இந்த போட்டியின் ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கை சேர்த்துள்ளதாகவும், ரிஷப் பந்தை மிஸ் செய்துள்ளதாகவும் டாஸின் போது தெரிவித்தார்.

தொடர்ந்து இரு நாடுகளின் தேசிய கீதமும் ஒலித்தது. பாகிஸ்தானுக்காக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கியிருந்தனர். கடந்த முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்த போது அவர்கள் இருவரும் 152 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதை இந்த போட்டியிலும் தொடர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் 10 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார் பாபர். ஃபகார் ஜமான் 10 ரன்கள் எடுத்து ஆவேஷ் கான் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் இப்திகார் அகமது மற்றும் ரிஸ்வான் ஆகியோர் 45 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த கூட்டணியை தகர்த்தார் ஹர்திக் பாண்டியா. இப்திகார் அகமது, 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாண்டியா வீசிய அதற்கடுத்த ஓவரில் ரிஸ்வான் மற்றும் குஷ்தில் ஷா விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ரிஸ்வான் 42 பந்துகளில் 43 ரன்களை எடுத்திருந்தார்.

தொடர்ந்து அந்த அணியின் பவர் ஹிட்டரான ஆசிஃப் அலி, 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். நவாஸ் 1 ரன்னிலும், ஷதாப் கான் 10 ரன்களிலும், நசீம் ஷா ரன் ஏதும் எடுக்காமலும், தஹானி 16 ரன்களிலும் அவுட்டாகி இருந்தனர்.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 147 ரன்களை எடுத்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in