நியூஸிலாந்து பேட்டிங் சரிவடைந்தது ஏன்? - ஓர் அலசல்

நியூஸிலாந்து பேட்டிங் சரிவடைந்தது ஏன்? - ஓர் அலசல்
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 3-0 என்று நியூஸிலாந்து தோல்வி தழுவியதற்கு நியூஸிலாந்து வீரர்களின் பேட்டிங் உத்திகளின் குறைபாடுகளே காரணம்.

கால்நகர்த்தல்களில் போதாமைகள் மிகுந்திருந்தன. நியூஸிலாந்து வீரர்கள் போராட்டமின்றி சரணடைந்தது அதிர்ச்சிகரமானது. குறிப்பாக அஸ்வின் போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக ராஸ் டெய்லர் போன்ற ஒரு அனுபவ வீரர் இந்தூரில் மோசமான ஸ்லாக் ஒன்றை முயற்சி செய்தது நியூஸிலாந்தின் சுய-அழிப்பு மனநிலையை பிரதிபலித்தது.

ஸ்பின்னிற்கு எதிரான குறைபாடுடைய, பொருத்தமற்ற உத்தியின் நேரடி விளைவுதான் மனரீதியாக உடைந்து போனதற்குக் காரணம். மேலும் ஸ்பின்னர்களுக்குச் சாதகமான ஆட்டக்களங்களில் நியூஸிலாந்து பேட்டிங் சரிவு உலக கிரிக்கெட்டில் பேட்டிங் தரநிலைகள் சரிவடைந்து வருவதை பிரதிபலிப்பதாக உள்ளது.

ஸ்விங், பவுன்ஸ், ஸ்பின் என்று எதுவாக இருந்தாலும் உள்நாட்டைத் தவிர வெளிநாடுகளில் அனைத்து அணிகளும் தடுமாறுவது வழக்கமாகி வருகிறது.

பொறுமையின்மை, இன்னிங்ஸை கட்டமைக்கும் திறமைகள் இன்மைக்கு டி20 கிரிக்கெட்டும் பங்களிப்பு செய்துள்ளது. இதோடு தவறான கால்நகர்த்தல்கள், அல்லது கால்களையே நகர்த்தாமல் ஆடுவது என்பது அயல்நாடுகளில் பல அணிகளின் சீரழிவுக்கு காரணமாக உள்ளது.

பந்துகள் திரும்பும் ஆடுகளங்களில் லெந்த்தைப் பொறுத்து பேட்ஸ்மென்கள் முன்னால் நகர்ந்து ஸ்பின்னை நசுக்க வேண்டும், அல்லது பின்னால் சென்று பலதரப்பட்ட தெரிவுகளையும் பயன்படுத்த வேண்டும். சுறுசுறுப்பான கால்கள் உடைய பேட்ஸ்மென்கள் ஸ்பின்னர்கள் பந்தை பிளைட் செய்யும் போது மேலேறி வந்து அவர்களின் வசதியான லெந்த்தை அடித்து நொறுக்க வேண்டும்.

மாறாக நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் முன்னால் சென்றும் ஆடவில்லை, பின்னால் சென்றும் ஆடவில்லை. இதுதான் நிறைய அவுட்களுக்குக் காரணமானது.

நின்ற இடத்திலிருந்தே வெளுத்துக் கட்டுவதற்கு வசதியாக கனரக மட்டைகள் கால் நகர்த்தல்களின் கலையைக் கட்டிப்போட்டு விட்டது. கனமான மட்டைகளினால் வலது கை பேட்ஸ்மென்கள் வலதுகையை அழுத்தி ஆடுவதும் இடது கை பேட்ஸ்மென்கள் இடது கையை அழுத்தி ஆடுவதும் அதிகரித்து விட்டது. இதனால் உடல் எடை சமச்சீராக ஆடும் போது இல்லாத நிலை ஏற்பட்டு பந்துகளை ஆடும்போது ஒருமாதிரியாக வளைந்து ஆடுகின்றனர் பேட்ஸ்மென்கள்.

நியூஸிலாந்து கேப்டனிடம் இந்திய பிட்ச்களில் ஆடக்கூடிய உத்திகள் உள்ளன, ஆனால் முதல் டெஸ்டில் அஸ்வின் அவருக்கு சோதனை அளித்தார். நல்ல அளவில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி உள்ளே நன்றாகத் திரும்பியது.

பந்தை தாமதமாக ஆடுவது என்பது ஒரு கலை. 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்திருந்தபோது- பேட்டிங் வரிசையைப் பார்த்தோமானால்- தற்போது பேட்டிங் தரம் எவ்வளவு சரிவு கண்டுள்ளது என்பது தெரியவரும். சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் டேமியன் மார்டின் அனில் கும்ப்ளேவையும் ஹர்பஜன் சிங்கையும் அசாதாரண முறையில் பின்னால் சென்று ஆடி நிரூபித்தார். ஆஃப் ஸ்டம்பில் கார்டு எடுத்துக்கொண்ட மார்டின் பந்தை மிக அழகாக ஸ்பின் ஆன பிறகு ஆடவோ, ஆடாமல் விடவோ முடிவெடுத்தார். இதனால் இந்திய ஸ்பின்னர்கள் லெந்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியர்கள் சீரிய திட்டமிடுதலுடன் நிபுணத்துவமான உத்தியில் ஸ்பின்னை வெற்றிகரமாக அப்போது எதிர்கொண்டனர்.

அதே போல் 2012-ல் இங்கிலாந்து இங்கு பயணம் மேற்கொண்ட போது அலஸ்டைர் குக், அதி அற்புதமான கால்நகர்த்தல்களை மேற்கொண்டார். மும்பையில் கெவின் பீட்டர்சன் 186 ரன்களை அடித்த போது முன்னால் வந்து விளாசினார். ஸ்பின்னர்களை செட்டில் ஆகவிடாமல் விளாசினார் பீட்டர்சன், அவர்களை ஆதிக்கம் செலுத்தினார்.

கால்நகர்த்தல்களுக்கான சிறந்த ஒரு உதாரணமாக, மாதிரியாக ஸ்வீப் ஷாட்டை கூற முடியாது, இது ரிஸ்க் நிரம்பியது. ஸ்பின்னர்களின் லெந்தை ஆட்டம் காண்பிக்க இதனை சாதுரியமாக பயன்படுத்தலாம். 2001 தொடரில் மேத்யூ ஹெய்டன் இதனை பெரிய ஆயுதமாக பயன்படுத்தி வெற்றிகண்டார். அப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிரம்பியதாக இருந்தது.

வித்தியாசமான சூழல்கள் வித்தியாசமான உத்திகளைக் கோருவது. ஆனால் துணைக் கண்டத்தில் நியூஸிலாந்து வீரர்கள் எந்த வித திட்டமும் உத்திகளும் இல்லாமல் சோடை போயுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in