

துபாய்: 6 அணிகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இரவு7.30 மணிக்கு இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27-ம் தேதி) தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி 20 வடிவில் நடத்தப்படுகிறது. இந்தத் தொடரை முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 7 முறை சாம்பியனான இந்தியாவுடன், பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. அதேவேளையில் 5 முறை பட்டமும் வென்ற இலங்கையுடன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதில் முதல் இரு இடத்தை பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ம் தேதி நடக்கிறது. இந்தத் தொடரின் ஆட்டங்கள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகிறது.
தொடக்க நாளான இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இருப்பினும் அனைவரது பார்வையும் நாளை (28-ம் தேதி) நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தின் மீதே உள்ளது. இந்தத் தொடரின் வாயிலாக விராட் கோலி இழந்த பார்மை மீட்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியானது தசன்ஷனக தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தது. ஆப்கானிஸ்தான் அணி போட்டியின் தினத்தில் எந்த ஒரு அணியையும் சீர்குலைக்கும் திறனைக் கொண்டுள்ளது. உலக அரங்கில் டி 20 பந்து வீச்சாளர்களில் முதன்மையான வீரராக திகழும் ரஷித் கான், சுழலுக்கு சாதகமான ஐக்கிய அரபு ஆடுகளங்களில் தனது மாயாஜாலங்களை நிகழ்த்தக்கூடும்.
வங்கதேசத்தை பொறுத்தவரையில் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன்கேப்டனாக திரும்பியதன் மூலம் ஒட்டுமொத்த அணியும் உற்சாகமடைந்துள்ளது. உலகக் கோப்பை நெருங்கி வருவதால்அணியின் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த தரன் ராம் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான இவர், வங்கதேச அணியின் போராடும் குணத்தை முன்னேற்றப் பாதையில்கொண்டு செல்வதில் முனைப்பு காட்டக்கூடும்.
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
‘ஹாட்ரிக் விருந்து’
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோத வாய்ப்பு உள்ளது. லீக் சுற்றில் இரு அணிகளும் நேரடியாக மோதும் நிலையில் அதைத் தொடர்ந்து நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் மீண்டும் பலப்பரீட்சை நடத்தக்கூடும். இதுதவிர இறுதிப் போட்டிக்கு இரு அணிகளும் தகுதி பெற்றால் ரசிகர்களுக்கு ‘ஹாட்ரிக்‘ விருந்துதான்.