

புதுடெல்லி: அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை பிஃபா நீக்கியுள்ளது. இதன்காரணமாக திட்டமிட்டபடி மகளிர் உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3-ம் தரப்பினர் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா), அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு சில தினங்கள் முன் இடைக்கால தடை விதித்து. மேலும், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு அமைப்பு கலைக்கப்பட்டு அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் கீழ் இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அனைத்து தினசரி நிர்வாகக் கட்டுப்பாடுகளும் வருகிறதோ அன்று தடை நீங்கும் என்று பிஃபா அறிவித்திருந்தது.
இந்தத் தடை உத்தரவு காரணமாக 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை இந்தியா இழக்கும் நிலை உருவானது. இந்தத் தொடரை வரும் அக்டோபர் 11 முதல் 30-ம் தேதி வரை இந்தியாவின் 3 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மதிப்பீடு செய்துவருவதாகவும், தேவைப்பட்டால் இந்த விவகாரம் கவுன்சிலுக்கு அனுப்பி ஆலோசிக்கப்படும் எனவும் பிஃபா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரண்டு வார இடைவெளிக்கு பிறகு இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை பிஃபா நீக்கியுள்ளது. இதுதொடர்பாக தனது இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ள பிஃபா, "இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழுவின் அதிகாரங்களை ஏற்க அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆணை நிறுத்தப்பட்டதையும், தினசரி விவகாரங்களில் AIFF நிர்வாகம் முழுக் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றது பிஃபா உறுதி செய்ததை அடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.