

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என தான் பிரார்த்தித்து வருவதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி. இருவரும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் சந்தித்துக் கொண்ட போது இதனை அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆறு அணிகள் தற்போது அமீரகத்தில் முகாமிட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை மறுநாள் இந்த தொடரில் பலப்பரீட்சை செய்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணியில் கோலி இடம் பெற்றுள்ளார். அதே வேளையில் பாகிஸ்தான் அணியில் அஃப்ரிடி இடம் பெறவில்லை. அவர் காயம் காரணமாக விலகி உள்ளார். இருந்தும் அணியுடன் பயணித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் இருவரும் மைதானத்தில் பயிற்சியின் போது சந்தித்துள்ளனர். அஃப்ரிடியின் காயம் குறித்து கோலி நலம் விசாரித்துள்ளார். அதற்கு அஃப்ரிடியும் ரெஸ்பாண்ட் செய்துள்ளார். அதன் பிறகே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டி பிராத்திக்கிறேன். உங்களை தரமான ஃபார்மில் பார்க்க நாங்கள் விரும்புகிறோம்” என சொல்லியுள்ளார். இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பகிர்ந்துள்ளது. அது உலக அளவில் கவனம் பெற்று வருகிறது. கடந்த சில போட்டிகளில் கோலி சரிவர பேட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஃபார்ம் குறித்து கிரிக்கெட் உலகில் ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலித்திருந்தன.
அஃப்ரிடி உடன் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மற்றும் சாஹல் போன்ற வீரர்களும் பேசி உள்ளனர். பந்த் உடனான உரையாடலில் அவர் ‘ஒத்த கை’ சிக்ஸர் குறித்து அஃப்ரிடி பேசியுள்ளதாக தெரிகிறது.