

துபாய்: 1986 ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டி நினைவுகளை பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம். அந்தப் போட்டியில் தங்கள் அணி வீரர்கள் இடைவிடாது அழுதுகொண்டே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
‘ஆசிய கோப்பை - 2022’ தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் வரும் 28-ம் தேதி துபாய் மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்தச் சூழலில் இரு அணிகளுக்கும் இடையிலான 1986 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியின் நினைவுகளை வாசிம் அக்ரம் நினைவுகூர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
“அந்த போட்டியில் நான் ரன் அவுட்டாகி வெளியேறினேன். அகமது சாதுர்யமாக செயல்பட்டு ஒரு ரன் எடுத்தார். அதன் மூலம் ஜாவித் மியான்தத் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். நான் பெவிலியன் திரும்பி இருந்தேன். அணியில் இருந்த இளம் வீரர்களில் நானும் ஒருவன். ஜாகிர் கான், மோஷின் கமல் போன்ற இளம் வீரர்களும் அணியில் இருந்தனர். ஆனால் அந்த போட்டியில் அவர்கள் விளையாடவில்லை.
ஆட்டம் முடிய கடைசி சில ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்களும் குறைவுதான். அப்போது அந்த ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் இடைவிடாது ஜாகிரும், மோஷினும் அழுதுகொண்டே இருந்தனர். ஏன் அழுகிறீர்கள் என நான் கேட்டேன். நாம் வெற்றி பெற்றாக வேண்டும் என ரிப்ளை செய்தார்கள். அழுதால் நாம் வென்று விடுவோமோ என கேட்டேன். அதோடு நானும் உங்களுடன் சேர்ந்து அழட்டுமா என்றேன். நம்பிக்கை வையுங்கள். சகோதரர் ஜாவித் வெற்றியை வசம் செய்வார் என அவர்களிடம் நான் சொல்லி இருந்தேன்” என அக்ரம் தெரிவித்துள்ளார். அவர் சொன்னதை போலவே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
அந்தப் போட்டியில் பெற்ற தோல்வியை இன்று நினைவுகூர்ந்தாலும் தனது தூக்கம் தொலைந்து போவதாக சொல்லி இருந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். இந்த உரையாடல் கபில்தேவ் மற்றும் வாசிம் அக்ரமுக்கு இடையே நடந்தது.