

மும்பை: புரோ கபடி லீகின் 9-வது சீசன் எதிர்வரும் அக்டோபர் 7-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 நாட்களுக்கு மேல் இந்த தொடர் நடைபெறும் என தெரிகிறது. இதன் இறுதிப் போட்டி டிசம்பர் மாத மத்தியில் நடைபெற உள்ளதாம். பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் என மூன்று நகரங்களில் இந்த சீசன் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 9-வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் குமன் சிங்கை சுமார் 1.21 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது ‘U Mumba’ அணி. இதுதான் இந்த ஏலத்தில் ஒரு வீரருக்கும் கிடைத்த அதிகபட்ச விலையாக உள்ளது. ‘தமிழ் தலைவாஸ்’ உட்பட மொத்தம் 12 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன.
"கபடி விளையாட்டை உலக அளவிலான ரசிகர்களுக்கும், அடுத்த தலைமுறையினர் இடத்தில் கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கத்துடனும் மஷல் ஸ்போர்ட்ஸ் புரோ கபடி லீக் பயணத்தை தொடங்கியது. வெற்றிகரமாக இதற்கு முந்தைய சீசன்களை நடத்தியதன் மூலம் அந்த இலக்கை எட்டியுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். 8-வது சீசன் பயோ-பபூளில் நடத்தப்பட்டது.
ஆனால் இந்த 9-வது சீசன் மூன்று நகரங்களில் ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அட்டவணை குறித்த விவரங்கள் வெளியாகும்" என அனுபம் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.