

ராஞ்சியில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அதிரடியாகத் தொடங்கி கடைசியில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் 10 ஓவர்களில் 80/0 என்று இருந்த நியூஸிலாந்து அதன் பிறகு ஸ்பின்னர்களான அமித் மிஸ்ரா, அக்சர் படேல், ஜாதவ் ஆகியோரது 28 ஓவர்களில் 107 ரன்களையே எடுத்து 3 விக்கெட்டுகளை அவர்களிடம் பறிகொடுக்க ரன் விகிதம் கடுமையாக மந்தமடைந்தது.
அமித் மிஸ்ரா 10 ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 10 ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 38 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்ற ஆச்சரியக் கண்டுபிடிப்பான கேதர் ஜாதவ் 8 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து கடும் சிக்கனம் காட்டினார்.
தொடக்க அதிரடி பிறகு வீழ்ச்சி:
நியூஸிலாந்து அணியில் ரோங்கி, ஹென்றி இல்லை, பதிலாக டேவ்சிச், சோதி, வாட்லிங் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூஸிலாந்து அணியில் 3 ஸ்பின்னர்கள் ஆடுகின்றனர். இந்திய அணியில் பும்ரா 100% உடற்தகுதி இல்லை என்பதால் தவல் குல்கர்னி சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் தவல் குல்கர்னி போன்றவர்களுக்கு விட்டு விட்டு வாய்ப்பளிக்கப்படுவதன் பலனை இந்திய அணியும், குல்கர்னியும் அனுபவித்தனர். 2-வது ஓவரில் குல்கர்னியை 3 பவுண்டரிகளையும் அவரது அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை லேதமும் விளாசினர். 2 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து சொதப்பினார்.
உமேஷ் யாதவ் பந்தில் மார்டின் கப்திலுக்கு மிட் ஆனில் அமித் மிஸ்ரா டைவ் அடித்து முயற்சி செய்து கேட்ச் ஒன்றை நழுவ விட்டார். அதனை நல்ல முயற்சி என்றே கூற வேண்டும். ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 12 ரன்களை விட்டுக் கொடுத்தார். உமேஷ் யாதவ் 4 ஓவர் 1 மெய்டன் 19 ரன்கள் என்று சிக்கனம் காட்டியவர் தனது அடுத்த ஓவரில் கப்தில் அடித்த இரண்டு பவுண்டரிகள் மூலம் 5 ஓவர்கள் 29 ரன்கள் என்று சிக்கனம் தவறினார்.
முதல் 10 ஓவர்களில் 80 ரன்கள் விளாசிய கப்தில், லேதம் ஜோடி அதன் பிறகு ஸ்பின்னர்கள் வருகையையடுத்து பவுண்டரி வறட்சி கண்டனர், அடுத்த 5.3 ஓவர்களில் 13 ரன்களையே அக்சர் படேல், அமித் மிஸ்ராவிடம் எடுக்க முடிந்தது ஆனால் 15.3 ஓவர்களில் 96/0 என்று ஓரளவுக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர் கப்திலும், லேதமும். அப்போதுதான் 39 ரன்கள் எடுத்த லேதம் அழுத்தம் தாங்க முடியாமல் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து படேலிடம் வீழ்ந்தார்.
வில்லியம்சனும், கப்திலும் இணைந்தபோதும் ரன் விகிதத்தில் முன்னேற்றம் இல்லை இருவரும் இணைந்து 10 ஒவர்களில் 42 ரன்களையே சேர்க்க முடிந்தது. அப்போது நன்றாக செட்டில் ஆகி 84 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்த கப்தில் பாண்டியா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரன்கள் எடுக்கக் கடினமான பிட்சில் நல்ல இன்னிங்ஸுடன் வெளியேறினார் கப்தில்.
59 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களுக்கு ஸ்பின் பந்து வீச்சை நன்றாக ஆடி வந்த வில்லியம்சன் 36-வது ஓவரில் மிஸ்ராவின் பந்தை கட் செய்ய முயன்று கூடுதல் பவுன்ஸ் காரணமாக எட்ஜ் செய்ய தோனி கேட்ச் பிடித்தார்.
கடந்த போட்டியில் அருமையாக ஆடிய ஜேம்ஸ் நீஷம் 6 ரன்களில் கவரில் கோலியிடம் கேட்ச் கொடுத்து மிஸ்ராவிடம் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பவுண்டரிகள் வரவில்லை. டெய்லரும் வாட்லிங்கும் போராடினர். படேல், யாதவ், மிஸ்ரா இந்த ஓவர்களை கடும் சிக்கனமாக வீசினர். பிட்சும் ஸ்ட்ரோக் ப்ளேயிற்கு ஆதரவாக இல்லை. யாதவ் ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கினார். 14 ரன்கள் எடுத்த வாட்லிங், குல்கர்னி பந்தில் பைன்லெக்கில் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்தார்.
டெய்லரின் வேதனை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது 58 பந்துகள் போராடிய அவர்ட் 1 பவுண்டரி மட்டுமே அடித்து 35 ரன்களில் தோனியிடம் அபாரமான முறையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். தவல் குல்கர்னி த்ரோவும் பெரிய த்ரோ இல்லை ஆனால் தோனி வழக்கம் போல் தனது சுறுசுறுப்பான நகர்வினால் ரன் அவுட்டை உருவாக்கினார் என்றே கூற வேண்டும். கடைசியாக டேவ்சிச் 11 ரன்களில் யாதவ்விடம் வீழ்ந்தார்.
நியூசிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. குல்கர்னி 7 ஓவர்களில் அதிகபட்சமாக 59 ரன்களை விட்டுக் கொடுத்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் 22 ஓவர்களில் 150 ரன்களை கொடுக்க ஸ்பின்னர்கள் 28 ஓவர்களில் 107 ரன்களையே விட்டுக் கொடுத்தனர்.