அமெரிக்க ஓபன் டென்னிஸ் | தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் ஜோகோவிச் வெளியேறினார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் ஜோகோவிச் வெளியேறினார்
Updated on
1 min read

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அவர் இந்த தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிகிறது.

35 வயதான ஜோகோவிச், செர்பிய நாட்டை சேர்ந்தவர். இதுவரையில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடி வென்றுள்ளார். அவரது அண்மைய கிராண்ட்ஸ்லாம் வெற்றியாக அமைந்துள்ளது கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடர். இந்நிலையில், அமெரிக்க ஓபன் தொடரில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.

“இந்த முறை அமெரிக்க ஓபன் தொடரில் விளையாட என்னால் நியூயார்க் பயணிக்க முடியவில்லை. மெசேஜ் மூலம் எனக்கு அன்பும், ஆதரவும் அளித்த எனது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி. இதில் பங்கேற்று விளையாடும் சக வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். அடுத்த முறை டென்னிஸ் கோர்ட்டில் களம் காண நான் ஆவலாக உள்ளேன். அதுவரை ஃபிட்டாகவும், நேர்மறை எண்ணத்துடனும் இருப்பேன். வெகு விரைவில் களத்தில் சந்திப்போம்” என அவர் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஜோகோவிச் நடப்பு அமெரிக்க ஓபன் தொடரில் பங்கேற்கவில்லை என தெரிகிறது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்திற்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த விவகாரத்தில் அவர் சட்டப் போராட்டம் மேற்கொண்டார். இருந்தும் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து தொடரில் பங்கேற்க முடியாமல் வெளியேறினார். அப்போது அது உலக அளவில் கவனம் பெற்றது. தற்போது மீண்டும் அதே தடுப்பூசி விவகாரத்தினால் அவர் அமெரிக்க ஓபனையும் மிஸ் செய்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் அதை சுட்டிக்காட்டவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in