

டோக்யோ: ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் சக இந்திய வீரர் லக்ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் மற்றொரு இந்திய வீரரான பிரனாய். அண்மையில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் லக்ஷயா.
நடப்பு BWF உலக சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்யோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 26 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய வீரர்கள் லக்ஷயா சென் மற்றும் ஹெச்.எஸ்.பிரனாய் ஆகியயோர் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொண்டனர்.
முதல் செட்டை 21-17 என லக்ஷயா சென் வென்றார். அதற்கடுத்த இரண்டு செட்டையும் 21-16, 21-17 என வென்றார் பிரனாய். அதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் சீன வீரர் ஷாவோ ஜுங்பெங் உடன் விளையாடுகிறார் அவர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரனாய் மட்டுமே.