

துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமை சந்தித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்த போது கைகளை குலுக்கி ‘ஹலோ; சொல்லிவிட்டு, சில நொடிகள் பேசி உள்ளனர்.
ஆசிய கோப்பை தொடர் அமீரகத்தில் நாளை மறுநாள் தொடங்கி செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. தொடரில் பங்கேற்கும் விதமாக அனைத்து அணிகளும் அமீரகத்தில் லேண்டாகி உள்ளன. இதில் பாகிஸ்தான் அணியும் அடங்கும்.
இந்த தொடரில் இரு அணிகளும் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் விளையாடுகின்றன. இரு அணிகளுக்கும் இதுதான் முதல் போட்டி. அதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் விளையாடிய போது இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது. அதுதான் இந்த எதிர்பார்ப்பு எகிற காரணம்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இந்திய வீரர் விராட் கோலி சந்தித்துக் கொண்ட வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் பகிர்ந்துள்ளது.
இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட்டிலும் பிசியாக ரன் குவித்து வரும் வீரர்கள். பாபர் 10,472 ரன்களும், கோலி 23,726 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.