திறமை இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது - விராட் கோலி ஆவேசம்

திறமை இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது - விராட் கோலி ஆவேசம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச அரங்கில் சதம் அடித்து ஏறக்குறைய 3 வருடங்களாகிறது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்திய தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் புத்துணர்ச்சியுடன் வரும் 27-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் (டி 20 வடிவம்) கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது: எனது ஆட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிவேன், சூழ்நிலைகள் மற்றும் நிலைமைகளை எதிர்கொள்ளும் திறமை மற்றும் பல்வேறு வகையான பந்துவீச்சுகளை எதிர்கொள்ளும் திறமை இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்க முடியாது. இந்த காலக்கட்டத்தை (மோசமான பார்ம்) கடந்து செல்வதற்கான செயல்முறை எளிதானதே.

2014-ல் இங்கிலாந்தில் நடந்தது வேறு மாதிரியானது (ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளில் ஒரே மாதிரி ஆட்டமிழந்தது). அதில் இருந்து வெளியேவர நான் வேலை செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்போது எனது பேட்டிங்கில் பிரச்சினை உள்ளது (சமீபகாலமாக ஆட்டமிழக்கும் விதங்கள்) என்று சுட்டிக்காட்ட எதுவும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, பேட்டிங் வழிமுறைகளை செயல்படுத்துவது உண்மையில் எளிதான விஷயம், ஏனென்றால் நான் நன்றாக பேட்டிங் செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். ரிதத்தை மீண்டும் உணரத் தொடங்கும் போது, பேட்டிங் சிறப்பானதாக அமைந்துவிடும் என்பதை அறிவேன். எனவே இது ஒரு பிரச்சினையே இல்லை.

பேட்டிங்கில் ஏற்ற, இறக்கங்கள் உள்ளதை அறிவேன். இந்த கட்டத்தில் இருந்து வெளியேவந்ததும், நான் எவ்வளவு சீராக பேட்டிங் செய்ய முடியும் என்பதை அறிவேன். எனது அனுபவங்கள் எனக்கு புனிதமானது. இதில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஒரு விளையாட்டு வீரராகவும், ஒரு மனிதனாகவும் என்னிடம் உள்ள முக்கிய மதிப்புகள் என்ன என்பதை புரிந்து கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு விராட் கோலி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in