

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக தொடக்க வீரர் ஷிகர் தவண் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கவுதம் கம்பீர் அவரது இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இடது கை கட்டை விரலில் ‘சிறிய எலும்பு முறிவு’ ஏற்பட்டுள்ளதால் இந்தூரில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவண் விளையாட மாட்டார்.
இதனையடுத்து பதிலி வீரராக கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் தொடக்க வீரராக கம்பீர் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு களமிறங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களும் முறையே 1, 17 என்று ரன்களை எடுத்த தவண், டிரெண்ட் போல்ட் பந்தில் இருமுறை அடி வாங்கினார். இதனால் அவரது இடது கை கட்டை விரலில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல் கான்பூர் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்ததால் அவரது நிலவரம் பற்றி இன்னமும் தெரியாத நிலையில் கம்பீருக்கு மீண்டும் வாய்ப்பு வந்துள்ளது.
கம்பீர் இதுவரை 4046 டெஸ்ட் ரன்களை 42.58 என்ற சராசரியில் பெற்றுள்ளார். இதில் 9 சதங்கள், 21 அரைசதங்கள் அடங்கும். கடைசியாக வங்கதேசத்திற்கு எதிராக 2010-ல் சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்தார் கம்பீர்.