Published : 21 Jun 2014 03:04 PM
Last Updated : 21 Jun 2014 03:04 PM

ஸ்டூவர்ட் பிராட் ஹேட்ரிக்; இலங்கை 257 ரன்களுக்குச் சுருண்டது

லீட்ஸில் நடைபெறும் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் ஹேட்ரிக் சாதனை புரிந்தார். ரியாம் பிளன்கெட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கை 257 ரன்களுக்குச் சுருண்டது.

இரண்டாவது முறையாக ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹேட்ரிக் சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹேட்ரிக் சாதனை புரிந்த ஒரே பவுலர் ஸ்டூவர்ட் பிராட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருமுறை ஹேட்ரிக் எடுத்த 4வது பவுலர் ஆவார் பிராட். முதலில் 2011ஆம் ஆண்டில் பிராட் ஒரு டெஸ்ட் ஹேட்ரிக் எடுத்தார். எந்த அணிக்கு எதிராகத் தெரியுமா? இந்தியாவுக்கு எதிராகத்தான்!!

ஆட்டத்தின் 63-வது ஓவர் கடைசி பந்தில் சங்கக்காரா (79) விக்கெட்டைக் கைப்பற்றினார் பிராட். சங்கக்காரா பிராட் வீசிய பந்தை தேவையில்லாமல் டிரைவ் ஆட முயன்றார். கல்லி திசையில் எப்படிப் பிடித்தோம் என்று அவருக்கே தெரியாத அசாதாரண கேட்சைப் பிடித்தார் இயன் பெல். இது ஹேட்ரிக்கின் முதல் விக்கெட்.

மீண்டும் 65வது ஓவரில் வீச வந்த பிராட், சந்திமால் (45) விக்கெட்டை வீழ்த்தினார். வெளியே சென்ற பந்தை அனாவசியமாக டிரைவ் ஆடச் சென்று கேட்ச் கொடுத்தார். இப்போது ஹேட்ரிக் வாய்ப்பு. அடுத்த பந்தே புதிய பேட்ஸ்மென் எரங்கா எட்ஜ் செய்ய பிரையர் கேட்ச் பிடித்தார். பிராட் ஹேட்ரிக் சாதனை புரிந்தார். ஆனால் அவருக்கு இது புரிய சற்று நேரம் ஆனது.

இலங்கை இன்னிங்ஸை சங்கக்காரா இழுத்துப் பிடித்து கொண்டிருந்தார். முதல் டெஸ்ட் சதம், அரைசதத்திற்குப் பிறகு நேற்று 79 ரன்களை அடித்தார். வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் உள்ளார் சங்கக்காரா. இவரை பிராட் வீழ்த்தியவுடன் இலங்கை இன்னிங்ஸ் சுவற்றுக் காரை போல் உதிர்ந்தது. 9 பந்துகளில் 4 விக்கெட்டுகள் சரிந்தது.

பிராடைத் தவிர டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு ஹேட்ரிக் சாதனை புரிந்தவர்கள் ஜிம்மி மேத்யூஸ், மற்றும் ஹியூ டிரம்பிள் என்ற ஆஸ்திரேலிய பவுலர்கள். அதன் பிறகு கிரேட் வாசிம் அக்ரம் இரு முறை ஹேட்ரிக் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

நேற்று பிராடைத் தவிர ரியாம் பிளன்கெட் அபாரமாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் மீண்டும் தன்னை அணிக்குத் தேர்வு செய்ததை தன் அபாரப் பந்து வீச்சின் மூலம் நியாயப்படுத்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள். இலங்கை 257 ரன்களுக்குச் சுருண்டது.

இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. குக் 14 ரன்களுடனும், ராப்சன் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x