

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 1996 முதல் 2012 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் சிறப்பாக விளையாடிவர் லஷ்மண். 134 டெஸ்ட் மற்றும் 86 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 11,119 ரன்களை குவித்துள்ளார். அண்மையில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் ஆக்டிங் பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது முதலே இந்திய அணியின் பயிற்சியாளராக லஷ்மண் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. தற்போது அதனை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுடன் ஹராரே நகரில் இருந்து அவரும் துபாய் செல்லும் விமானத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், தீபக் ஹூடா மற்றும் ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் ஹராரே நகரில் இருந்து துபாய் புறப்பட்டுள்ளனர்.
ஆசிய கோப்பை தொடர் 27 ஆகஸ்ட் முதல் 11 செப்டம்பர் வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ரோகித் தலைமையில் களம் காண்கிறது.