

காயத்திலிருந்து முழுதும் விடுபட்ட அர்ஜெண்டின நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி பிரேசில், கொலம்பிய அணிகளுக்கு எதிரான முக்கிய உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் ஆடுகிறார்.
செப்டம்பர் 1-ம் தேதி உருகுவே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அர்ஜெண்டினா அணிக்கு மெஸ்ஸி காயம் காரணமாக ஆடவில்லை.
ஆனால் பார்சிலோனா அணிக்காக 2 போட்டிகளில் 4 கோல்களை அடித்து தனது உடல்தகுதியை மெஸ்ஸி நிரூபித்தார். இதில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அபாரமான ஹாட்ரிக் சாதனையையும் புரிந்தார்.
மெஸ்ஸி இல்லாததால் பெரு அணிக்கு எதிராக அர்ஜெண்டினா 2-2 என்று டிரா செய்ததோடு சொந்த மண்ணில் பராகுவே அணிக்கு எதிராக 0-1 என்று தோல்வி தழுவியது. இதனையடுத்து 2018 ரஷ்ய உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்போது மீண்டும் மெஸ்ஸி வரவால் ஜேவிய மஸ்செரானோ, கொன்சாலோ ஹிகுவெய்ன், செர்ஜியோ அகிரோ, பாப்லோ சபலேட்டா ஆகியோர் உற்சாகமடைந்துள்ளனர்.