Published : 23 Aug 2022 06:26 PM
Last Updated : 23 Aug 2022 06:26 PM
மும்பை: கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, தனது வாழ்வாதாரத்திற்காக வேண்டி உருக்கமான ஒரு கோரிக்கையை மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் முன்வைத்திருந்தார். இந்நிலையில், அவருக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை கொடுக்க மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தன் குடும்பமே இப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்து வரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.30 ஆயிரத்தை மட்டுமே நம்பி இருப்பதாகவும் காம்ப்ளி தெரிவித்திருந்தார். இப்போதைக்கு தனக்கு வேண்டியது ஒரே ஒரு வேலைதான் எனவும் அந்த பேட்டியில் அவர் சொல்லி இருந்தார்.
பல இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறன் மூலம் வறுமையை விரட்டி அடித்ததாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலம் இது. அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தும், நிதி சிக்கலில் கிரிக்கெட் வீரர்கள் சிலர் திண்டாடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் காம்ப்ளி.
இந்திய அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நண்பரும் கூட. ‘அவருக்கா?’ இந்த நிலை என பலரும் வருத்தம் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில்தான் அவருக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்துள்ளார் நல் உள்ளம் கொண்ட தொழிலதிபர் ஒருவர். ஆனால், அந்த வேலை கிரிக்கெட் விளையாட்டில் இல்லாமல் நிதித் துறையை சார்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT