

பாகிஸ்தானுக்கு எதிராக முல்டானில் சேவாக் தன் முதல் முச்சதத்தை விளாசினார். ஆனால் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் முச்சதம் அடிப்பேன் என்று இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே சேவாக் உறுதியுடன் தெரிவித்திருக்கிறார்.
இன்று பிறந்தநாள் காணும் சேவாக் தற்போது கிரிக்கெட் வர்ணனையளராகவும், ட்விட்டரில் நகைச்சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்பவருமாக இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் வாஹ் தலைமையில் 2001-ம் ஆண்டு இந்தியா வந்த புகழ் பெற்ற தொடரில் கொல்கத்தாவில் லஷ்மணின் வரலாற்றுச் சிறப்பு மிக்க 281 ரன்கள் இன்னிங்ஸ் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை புரட்டிப் போட்டது.
இந்நிலையில் 2001-ம் ஆண்டு தனது 281 இன்னிங்ஸ் குறித்து சேவாக் கூறியதை நினைவு கூர்ந்த வி.வி.எஸ். லஷ்மண், “உங்களுடைய கொல்கத்தா 281 இன்னிங்ஸ் ஒரு சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ் என்பதை நான் அறிவேன். நீங்கள் முச்சதத்தை அடிக்கத் தவறிவிட்டீர்கள், நீங்கள் அந்த இன்னிங்ஸில் முச்சதம் அடித்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முச்சதம் அடிப்பேன் என்பது நிச்சயம்” என்று சேவாக் கூறியதை லஷ்மண் விதந்தோதினார்.
சேவாகின் தன்னம்பிக்கையையும் உறுதியையும் கண்டு தான் அசந்துபோனதாக தெரிவித்த லஷ்மண், 2001-ல் கூறி 2004-ல் முல்டானில் பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக் முச்சசதம் விளாசியதை விதந்தோதினார்.
2 முச்சதங்களை அடித்தாலும் தனக்கு அதிக திருப்தி அளித்தது இலங்கைக்கு எதிராக 293 ரன்கள் இன்னிங்ஸ்தான் என்று சேவாக் தெரிவித்திருக்கிறார்.